ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் திட்டமிட்டு தமிழின அழிப்பு நடத்தப்படுவது தொடர்பில், அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரி, நெதர்லாந்தில் ஈருருளிப்பயண போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நெதர்லாந்து பிறேடா நகரசபைக்கு முன்பாக குறித்த மனிதநேய ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம், நெதர்லாந்து ரொத்தர்டாம் நகரசபை ஊடாக இந்த மனித நேய ஈருருளிப்பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பெல்ஜியம் எல்லையை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பெரிஸில் உள்ள தமிழர்கள் திறந்தவெளி கண்காட்சி ஒன்றை நடத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் பிரான்சில் உள்ள தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சி, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்றுள்ளது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் 400 தமிழர்களின் உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.



