இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளதாகவும் இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் மே மாதம் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு தாம் விஜயம் செய்யவுள்ளதாகவும் கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் இழுவை படகு மீன்பிடிக்கு இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது ஊடகங்களுக்கு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், திருவிழாவில் கலந்துக் கொண்ட இந்திய நாட்டுப்படகு மீனவர் சங்கம் மற்றும் தமிழக கடல்சார் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் மகஜர் ஒன்றையும் அவர்கள் அமைச்சரிடம் கையளித்தனர். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர், இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இரு தரப்பு மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீனவர் பிரச்சினைக்கு கட்டம் கட்டமாக தீர்வு காணப்படும்.
மே மாதத்துக்கு பின்னர் தமிழகத்துக்கு செல்லும் போது இந்த பிரச்சினையுடன் தொடர்புடைய சகல தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.



