அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘அமைதி வாரியம்’ (Board of Peace) அமைப்பிற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு, (ஜனவரி 22) ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றது.
அப்போது பேசிய டிரம்ப், “இது மிகவும் உற்சாகமான நாள், இதற்காக நீண்ட காலமாக திட்டமிடப்பட்டது” என்று கூறினார்.
“எல்லோரும் எனது அமைதி வாரியத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை உட்பட பலருடன் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
‘அமைதி வாரியம்’ உருவாக்கப்பட்டவுடன், “நாம் செய்ய விரும்புவதை ஓரளவிற்குச் செய்ய முடியும். அமைதி வாரியம் மற்றும் ஐ.நா-வின் முயற்சிகளை இணைப்பது உலகிற்கு மிகவும் தனித்துவமானதாக அமையும். இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான முதல் படி” என்றும் டிரம்ப் கூறுகிறார்.
தனது உரையை நிறைவு செய்யும் விதமாக, அமைதி வாரியத்திற்கான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு பஹ்ரைன் மற்றும் மொராக்கோ பிரதிநிதிகளுக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
வாரியத்தின் மற்ற உறுப்பினர்கள் கையெழுத்திட அழைக்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் மூவரும் சிரித்துக் கொண்டே ஆவணங்களை உயர்த்திப் பிடித்தனர்.
டிரம்ப் தனது உரையின் போது, காஸாவைப் பற்றியும் பேசினார். அங்கிருந்துதான் அமைதி வாரியத்திற்கான திட்டம் தொடங்கியதாக அவர் கூறுகிறார்.
“ஹமாஸ் அமைப்பு அவர்கள் செய்வதாக உறுதியளித்ததை ‘அநேகமாகச் செய்வார்கள்’. அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும், அதைச் செய்யவில்லை என்றால், அது அவர்களின் முடிவாக அமையும்” என்றார் டிரம்ப்.
ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, அக்டோபர் 10 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து காஸாவில் குறைந்தது 466 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.



