வெனிசுலா, கனடா, கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடத்தை வெளியிட்டார் ட்ரம்ப்

வெனிசுலா, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு வரைபடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெளியிட்டுள்ளார்.

உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகள், அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து சென்றது.

மேலும், அந்நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியாக விளங்கும் கிரீன்லாந்தை முழுவதுமாக அமெரிக்கா ஆக்கிரமிக்க வேண்டும் என ட்ரம்ப் கூறி வருகிறார்.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் முக்கியம். நாங்கள் இந்த கிரீன்லாந்தை கைப்பற்றாவிட்டால் சீனா அல்லது ரஷ்யா கைப்பற்றிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ட்ரம்ப் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு, டென்மார்க் மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெனிசுலா, கனடா நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிப்பிட்டு செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வரைபடத்தை அதிபர் ட்ரம்ப் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.