திருகோணமலையில் விகாரைக்காக அத்துமீறி தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்தது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், குச்சவெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை, குச்சவெளி இலந்தைக்குளம் பகுதியில் விகாரைக்காக அத்துமீறி துப்பரவு செய்யப்பட்ட மக்களுடைய காணிகளை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், குச்சவெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நேரடியாக விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.
குச்சவெளி – இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியில் கடந்த மாதம் 25ஆம் திகதி பௌத்த மத குரு ஒருவரின் தலைமையில் புத்த விகாரை அமைப்பதற்காக மக்களுடைய காணிகள் துப்பரவு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் குச்சவெளி பிரதேச செயலாளருக்குத் தெரியப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து குறித்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மக்களுடைய காணிக்குரிய ஆவணங்கள் ஆராயப்பட்டதுடன், குறித்த மக்களுடைய காணிகளை விடுவிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட விகாராதிபதியுடனும் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், குச்சவெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.