திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது.

எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, குறித்த குழுவினரை ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.