ஈழத் தமிழர்களின் அரசியல் பிதாமகன் எனப் போற்றப்படும் தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் 128-வது ஜனனதினம் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். நகரில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன், கட்சியின் பதில் தலைவர் சி. வி. கே. சிவஞானம் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைத்துத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நீண்டகாலம் அகிம்சை வழியில் போராடிய தந்தை செல்வாவின் கொள்கைகள், இன்றும் தமிழ் அரசியலின் திசைக்காட்டியாகத் திகழ்வதாக இதன்போது உரையாற்றிய எம். ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.




