அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்று(28) நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆசிரியர் – அதிபர்களும் இணைந்துகொள்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
பெரும்பாலான இரயில்வே ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் இணைந்துகொண்டுள்ளதுடன், இரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று(27) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே, ஆட்பதிவு திணைக்களத்தின் எவ்வித சேவைகளும் இன்று(28) இடம்பெறமாட்டாது என ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த பணிப்பகிஷ்கரிப்பில் ஊழியர்கள் இணைந்துகொள்கின்றார்களா, இல்லையா என்பது தொடர்பில் நிர்வாகத்திற்கு இதுவரை அறிவிக்கப்படவில்லையென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்ததுள்ளது.
அதன் காரணமாக, வழமையான நேர அட்டவணைக்கு அமைய இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார்.
தனியார் பேருந்து சேவையை உரிமையாளர்களின் விருப்பத்திற்கேற்ப நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இரயில்வே ஊழியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டத்தினால் இன்று(28) இரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக இரயில்வே பொதுமுகாமையாளர் அறிவித்துள்ளார்.
அதன் காரணமாக, மாற்று போக்குவரத்தினை பயன்படுத்துமாறு பயணிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலான வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில், இன்று(28) நண்பகல் சேவைகளில் இருந்து விலகி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.