கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுத் தலைவரின் வரிவிதிப்புப் போரில் இந்தியாவுக்கான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களின் வரி 50 வீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. அதில் 25 வீதம் இந்தியாவுக்கு அது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்ததற்கான தண்டனை வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு பெரும் பொருளாதாரச் சவாலை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் “ரஷ்யாவின் அரசுத் தலைவர் புடின் இந்தியாவுக்கு விரைவில் நேரடி வருகை தந்து உச்சநிலைக் கருத்தரங்குகளை நடாத்தி அடைய வேண்டிய இலக்குகளின் எல்லைகள் குறித்த விவாதங்களைச் செய்யவுள்ளதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அறிவுரையாளர் டோவல் ரஷ்யாவில் வைத்துக் கூறியுள்ளார். ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் அமைச்சர் சேர்கை சைகூ இந்திய-ரஷ்ய நட்புறவு காலத்தால் பரிசோதனைகளுக்கு உட்பட்டு உறுதியான நட்பு” என்று வர்ணித்துள்ளார். “ஒருவரை ஒருவர் மதித்தல், நம்பிக்கை, ஒருவர் மற்றவரது ஆர்வங்களைச் சமமாகக் கருதி ஒன்றுபட்ட செய்பணி நிரல்களை உருவாக்குதல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்ட இருதரப்பையும் முற்றாகப் பலப்படுத்தத் தக்க விசேட முன்னுரிமை தந்திரோபாய பங்காண்மைகளை உருவாக்குதல் மொஸ்கோவுக்கு முக்கியமானதாக உள்ளது” என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் அமைச்சர் சேர்கை சைகூ விளக்கிக் கூறியுள்ளார். அத்துடன் “புதிய அதிக நீதியும் நீண்டகால மேம்பாட்டுக்கானதுமான உலக முறைமையைத் தோற்றுவித்து அனைத்துலக சட்டங்களை உறுதிப்படுத்தி கூட்டாகப் புதிய சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள ஒத்துழைப்புடன் செயற்பட நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.” எனவும் அமைச்சர் சேர்கை சைகூ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்திய ரஷ்ய நட்பு பலம்பெறும் சூழலில் ரஷ்யாவைக் கொண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியா ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதி வளர்ச்சிகளை மேம்படுத்தும் எந்த முயற்சியையும் அனுமதிக்காது என்ற துணிவில் சிறிலங்கா ஈழத்தமிழர்கள் மேலான தனது கட்டுப்பாடுகளைச் சகல நிலைகளிலும் மேலும் இறுக்கமடையச் செய்யும் செயற்பாடுகளை வேகப்படுத்தும் என்பது வெளிப்படையான உண்மை. அதே வேளை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சீனாவுக்கு இம்மாதக் கடைசியில் நேரடியாகச் செல்லவுள்ளார் என்ற ஆரம்பச் செய்தியும் வெளியாகியுள்ளது. இதன்வழி சீன ரஸ்ய இந்திய துணையுடன் சிறிலங்கா தனது ஈழத்தமிழர்களின் இறைமை ஒடுக்கத் தேசிய நீக்கத் திட்டங்களை வேகப்படுத்துகையில் ஈழத்தமிழர்கள் அதற்கான சனநாயக வழி எதிர்வினைகளை எவ்வாறு செய்யலாம் என சிந்தித்துச் செயற்பட வேண்டிய நேரமிது என்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
கூடவே பிரித்தானியப் பாராளுமன்ற அறிக்கையில் இந்தியாவும், சீனா, எகிப்து, எரித்திரியா, ஈரான், பாகிஸ்தான், ரஸ்யா, பஹ்ரைன், ரூவாண்டா, துருக்கி, சவூதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் எமிரேட்ஸ் ஆகியவற்றுடன் சேர்த்தது பிரித்தானியாவில்”நாடு கடந்த அடக்குமுறைகளில்”ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதை இந்திய வெளிவிவகார அமைச்சின் குரல்தரவல்ல பேச்சாளர் ரந்தீர் ஜைஸ்வால் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளார். இச்செய்தியும் கூட மேற்குலக ஆசிய விரிவாக்கங்களைத் தடுப்பதற்கான ஆசிய கோட்டை என்கின்ற பாதுகாப்புக்கட்டமைப்புக்கு ஆசிய நாடுகள் தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ தங்களைக் கட்டமைக்கின்றன என்பதைத் தெளிவாக்கி வருகின்றன. இதற்குள் சிறிலங்காவையும் இவை தம்மோடு இணைப்பதற்கான ஆர்வங்களை வெளிப்படுத்துகையில் அதனைச் சிறிலங்கா தனது ஈழத்தமிழின அழிப்புக்கான சாதகமான காலமாகப் பயன்படுத்தும் பேரபாயம் தோன்றக் கூடுமென்பதால் ஈழத்தமிழர்களின் இறைமையினை அவர்கள் மீளுறுதி செய்வதற்கான சமகாலப்பெருந்தடையாக இவை அமையும் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. இதனை எவ்வாறு ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப் போகின்றார்கள்? ஈழத்தமிழர்களின் தாயக உலக தேசிய ஒருமைப்பாடு ஒன்றே இதற்கான ஒரே பாதுகாப்புக்கவசம் என்பது இலக்கின் தெளிந்த முடிபு.
அதே வேளை, சிறிலங்கா தமிழர் தாயகம் முழுவதையும் தனது 2009 இல் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தை முப்பததொரு ஆண்டுகள் முன்னெடுத்த ஈழத்தமிழரின் நடைமுறையரசை முறியடித்தது போல இஸ்ரேல் காசா நீள்கரை முழுவதையும் தனது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனது இராணுவக்கட்டுப்பாட்டை காசா முழுவதும் முழுமைப்படுத்தும் செயற்பாடுகளைத் கடந்த வாரத்தில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிறீலங்கா இஸ்ரேலுக்கும் இலவச விசா முறையை அறிமுகம் செய்துள்ளது. இது யுத்தக்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை வன்முறைகள் செய்த இஸ்ரேலியப் படையினர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தங்களுக்கான பாதுகாப்பான காலனி ஒன்றை அமைக்கத் தொடங்கியுள்ளதை மேலும் வலுப்படுத்தும் என்று இலங்கையில் உள்ள முஸ்லீம் தலைவர்கள் சிலர் கடந்த வாரத்தில் அச்சமாக உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். முஸ்லீம் மக்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் இதனால் பெரும்பாதிப்புக்கள் ஏற்பட இடமுண்டு.
அவ்வாறே சிறிலங்கா அமெரிக்க வர்த்தகப் போரில் தனக்கு விதிக்கப்பட்ட 44 வீத வரியினை 30 வீதமாகவும் பின்னர் 20 வீதமாகவும் குறைப்பதற்கு எத்தகைய சலுகைகளை பாதுகாப்பு நிலையில் அமெரிக்காவுக்கு அளித்துள்ளது என்ற சந்தேகமும் கடந்த வாரத்தில் சிங்கள கட்சிகளிடை எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவுடன் செய்யப்பட்ட ஏழு ஒப்பந்தங்கள் மற்றும் சீனாவுடன் செய்யப்பட்ட பதினாறு ஒப்பந்தங்கள் தொடர்பான இத்தகைய கேள்விகளைச் சிங்களச் சமூகம் எழுப்பி வருகிறது. இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈழத்தமிழர் தாயகப் பகுதியின் சொந்தமான இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள இந்துமாக்கடலின் பெரும்பாகம் தான் முக்கிய இடம்பெறும் என்பதையே ஈழத்தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நேரமிது.
இந்நிலையில் சீனா தற்போது சிறிலங்காவின் ஆட்சியாளர்களாக உள்ள தேசிய மக்கள் சக்தியினர் அடுத்த பத்து பதினைந்து வருடங்களுக்குத் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தாலே உரிய மாற்றங்களை கொண்டு வரலாம் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரில்வின் டி சில்வாவுக்குத் தெரிவித்ததாக அவர் கடந்த வாரத்தில் வெளியிட்ட தகவல் தேசிய மக்கள் சக்தியும் முன்னைய ஆட்சி நீடிப்பாளர்களான சிறிமாவோ பண்டாரநாயக்கா ஜே அர் ஜயவர்த்தனா வழியில் ஆட்சி நீடிப்புச் செய்யும் ஆட்சியாளர்களாக மாறுவதற்கான முன்னறிவிப்பாக அமைகின்றது.
கடந்த வாரத்தின் நிகழ்வுகள் எல்லாமே இன்றைய உலகின் மாற்றங்கள் ஈழத்தமிழரின் இறைமையை மீளுறுதி செய்யும் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தடைகள் அதிகரிப்பதற்கான அனைத்துலக மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளையே உறுதி செய்கின்றன. இந்நிலையில் உலகின் சிறுதேசஇனமாக உள்ள ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகெங்கும் எவ்வாறு தங்கள் இறைமையை மீளுறுதி செய்யும் தொடர் தேசியப் போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறார்கள் என்பது இன்றைய முக்கிய கேள்வியாக இலக்கு கருதுகிறது. இதற்கான கருத்தியல் தெளிவை வளர்க்கும் வகையில் “இன்றைய உலகின் மாற்றங்களும், அதில் ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்தலும்” என்கிற சிந்தனைகளையும் கருத்தாடல்களையும் இம்மாதத்தில் ஊடகங்கள் வளர்க்க வேண்டுமென்பதே இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது. இந்த சிந்தனை தெளிவுடனேயே செப்டம்பர் மாத மனித உரிமைகள் ஆணைக்குழு விவகாரங்களையும் ஈழத்தமிழர்கள் அணுக வேண்டுமென்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்