1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 04ல் இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்றது.
என கூறப்பட்டு சரியாக 09, மாதங்களில் அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது .
இது 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசின் பிரதமராக இருந்த டி.எஸ், சேனநாயக்கா (டொன் ஷ்ரீபன் சேனநாயக்கா) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைசட்டமே மலையக உறவுகள் வெளியேற காரணமானது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இது புதிதாக விடுதலை பெற்ற நாடொன்றிற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும் சிங்களத் தேசிய வாதிகள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள். அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் அவர்கள் வெற்றிபெற்றார்கள்.
நாடு விடுதலை பெற்றதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றுவந்த இன முரண்பாடுகளின் தொடக்க வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தச் சட்டம் அமைந்தது எனலாம். தந்தை செல்வா இலங்கை தமிழரசு கட்சியை 1949, டிசம்பர்,18, உதயமாக அடித்தளமிட்டதற்கு இந்த சட்டமும் ஒருகாரணமாக வழிவகுத்தது என்பதே வரலாறு.



