தாய் மொழியில் பற்றில்லாதவன்..!
தாயிலும் பற்றில்லாதவனே..!
தாயில் பற்றில்லாதாவன்..!
தாய் நிலத்தில் பற்றில்லாதவனே..!
தாய் நிலப்பற்றில்லாதவன்..!
தமிழ் இனப்பற்றில்லாதவனே..!
தமிழ் மொழியில் பற்றில்லாதவன்..!
தன் இனப்பற்று இல்லாதவனே..!
1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாக்கித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
வங்காள தேசஅரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 அன்று பொதுமன்ற மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத்தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெசுக்கோ அறிவித்தது.
2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெசுக்கோ பாரிசில் “தாய்மொழிகளும் நூல்களும் – எண்ணிம நூல்களும் பாடநூல்களும்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது
1999 ஆம் ஆண்டில் பெப்ரவரி 21 ஆம் திகதியை பன்னாட்டு தாய்மொழி நாளாக யுனெஸ்கோஅமைப்பு அறிவித்தது. முதல் உலகம் முழுவதிலும் 2000 ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி 21 ஆம் திகதி பன்னாட்டு தாய்மொழி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
1947 ஆம் ஆண்டில் கிழக்கு பாக்கித்தான் (தற்போது வங்காளதேசம்), மேற்கு பாக்கித்தான் (தற்போது பாக்கித்தான்) ஆகிய இரு வெவ்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டு பாக்கித்தான் எனும் நாடு உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்குஇடையில் மேற்கிலும் கிழக்கிலும் பிரிக்கப்பட்ட இரு பகுதிகளும் மொழியிலும் பண்பாட்டிலும் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டிருந்தன.
கிழக்கு பாக்கித்தானில் (வங்களாதேசம்) உள்ள பெரும்பான்மை மக்களால் வங்காள மொழி பேசப்பட்டாலும் 1948 ஆம் ஆண்டின் அப்போதைய பாக்கித்தான் அரசு உருது மொழியை ஒருமித்த பாக்கித்தான் நாட்டின் ஒரே தேசிய மொழியாக அறிவித்தது. இதற்குக் கிழக்கு பாக்கித்தான் மக்க தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கிழக்கு பாக்கித்தான் மக்கள் அவர்களது தாய் மொழியான வங்காள மொழியைக் குறைந்தது தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டுமென்று கோரினார்கள். இந்தக் கோரிக்கை முதலில் தேரேந்திரநாத் தத்தா அவர்களால் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் நாளன்று பாக்கித்தான் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.
இதற்காக, தாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பொது மக்களின் ஆதரவுடன், மாபெரும் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்தனர். போராட்டத்தை முடக்குவதற்காக பாக்கித்தான் அரசாங்கம் பொதுக் கூட்டத்தையும் பேரணிகளையும் தடை செய்தது. 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி நடைப்பெற்ற பேரணியில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டினால் அப்துசு சலாம், அப்துல் பார்கத், இரபீக் அகமது, அப்துல் ஜபார், சபியூர் இரகுமான் ஆகிய மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தாய்மொழிக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த இந்த நிகழ்ச்சி வரலாற்றில் பதியப்பட்ட அரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
இதற்குப் பிறகு வங்காளத் தேச மக்கள் பன்னாட்டுத் தாய்மொழி நாளை ஓர் துயரம் தோய்ந்த நாளாகக் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் தாய்மொழிக்காக உயிரீந்த மாணவ்ரின் நினைவிடமான சாகிது மினாரை அடைந்து ஒவ்வோர் ஆண்டும் தம் ஆழ்ந்த அவலத்தையும் மதிப்பையும் நன்றிக் கடப்பாட்டையும் நினைவேந்தலூடாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது வங்காளத் தேசத்தில் பன்னாட்டுத் தாய்மொழி நாள் ஒரு பொது விடுமுறை நாளாகவே(தேசிய நாளாகவே) கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் கனடாவில் வாங்கூரில் வாழும் வங்க தேச நாட்டவராகிய இரபுக்குள் இசுலாமாலும் அப்துசு சலாமாலும் முதலில் முன்மொழியப்பட்டது. இவர்கள் 1998 ஜனவரி 9 இல் கோபி ஆன்னுக்கு ஒரு கடிதம் வழி உலக மொழிகள் மறையாமல் காத்திட பன்னாட்டுத் தாய்மொழி நாளைக் கொண்டாடுவதற்கான தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொண்டனர். இதற்கு இரபிக்குல் 1952 இல் நடந்த மொழி இயக்கத்தின்போது தாக்காவில் கொல்லப்பட்ட பெப்ரவரி 21 ஆம் நாளை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



