13க்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்கிறார் திஸ்ஸ விதாரண

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பழமையான மற்றும் முதன்மையான இடதுசாரிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் 90ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் விசேட மாநாடு  கடந்த 20ம் திகதி நடைபெற்றது.
இதில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராகத் தாம் முன்னெடுத்த அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் இன்றும் காலாவதியாகவில்லை என்று அவர் கூறினார்.
13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய ஒரு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதே சமசமாஜக் கட்சியின் நீண்டகால நிலைப்பாடாகும்.

பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று 1950களிலேயே இக்கட்சி தீர்மானம் நிறைவேற்றிய வரலாற்றுத் தூரநோக்கை மீண்டும் நினைவூட்டுகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை மிக அவசியமானது.
1972ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை உருவாக்குவதில் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆற்றிய வரலாற்றுப் பணியைப் போன்றே, தற்போதைய காலத்திலும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க இடதுசாரிகள் கைகோர்க்க வேண்டும் என்று லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.