காணாமல் போனவர்கள் தொடர்பாக இதுவரையில் 11,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்

காணாமல் போனவர்கள் தொடர்பாக இதுவரையில் 11,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திபொன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகளில் போதிய முன்னேற்றம் இல்லை என முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

எனினும், இதற்கு முன்னைய அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் பொறுப்பல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 375 அதிகாரிகளுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்காகத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு, கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 5,000 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு பகுதிகளிலும் இடம்பெற்ற காணாமல் போன சம்பவங்கள் குறித்து நாங்கள் விசாரணைகளை முன்னெடுப்போம்” என்று நீதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.