இலங்கையில், குற்றச்செயல்களில் ஈடுபட்டு கடந்த வருடம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த, ஐரேஷ் ஹசங்க, சுகத் சமீந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களை பெங்களூரு மத்திய குற்றத்தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூவரும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தெரிவிக்கப்படும், பெங்களூரு- விவேக்நகரைச் சேர்ந்த ஜெய் பரமேஷ் என்ற 42 வயதுடைய சந்தேகநபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தலைமறைவாகியுள்ள ஜலால் என்பவர் ஜெய் பரமேஷிடம் வீடு ஏற்பாடு செய்யுமாறு கேட்டதாகவும், ஜெய் பரமேஷ் அதை செய்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதேநேரம், அவர்கள் கடல் வழியாக செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்தது கண்டறியப்பட்டது.
சுமார் 15 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து, வீதி வழியாக பெங்களூருவை அடைந்தனர். மேலும், அவர்களுக்கு குற்றப் பின்னணி இருப்பது கண்டறியப்பட்டது.
சுகத் சமீந்து மீது இலங்கையில் நான்கு கொலை வழக்குகள் உள்ளன, ஐரேஷ் ஹசங்க மீது ஐந்து கொலை வழக்குகள் உள்ளன, திலீப் ஹர்ஷன மீது இரண்டு தாக்குதல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் குறித்து மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் பெங்களூரு மத்திய குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் செப்டம்பர் முதலாம் திகதி வரை காவல்துறை காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.