முல்லைதீவு – முத்தையன்கட்டு பகுதியில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த மூன்று இராணுவத்தினரும் தாக்குதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 9ம் திகதி காலை பொதுமகன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் தரப்பு சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்துகிறது. எனினும், இராணுவ தரப்பு, சடலம் மீட்கப்பட்ட விடயத்தில் தமக்கு தொடர்பில்லை என்றுக் கூறுகிறது.
முத்தையன்கட்டு இராணுவம் முகாமில் பணி ஒன்றுக்காக படையினரின் அழைப்பை ஏற்று, ஐந்து இளைஞர்கள் அங்கு சென்றதாகவும் அவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமது முகாமுக்குள் அத்துமீறி பிரவேசித்த 5 பேரை, தமது இராணுவம் பின்தொடர்ந்ததாகவும் அதில் ஒருவர் பிடிக்கப்பட்டு, அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஏனையோர் தப்பிச் சென்றதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவங்கள் வரையில் மாத்திரமே இராணுவம் தொடர்புபட்டிருப்பதாகவும் அதன் பின்னர், இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமைக்கும் இராணுவத்துக்கும் தொடர்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், காவல்துறையினரின் விசாரணைகளுக்கு படையினர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் இராணுவம் பேச்சாளர் தெரிவித்தார்.



