இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப இதுவே சரியான தருணம்: ஐ.நா

இலங்கையில்  இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இதுவே சரியான தருணம் எனச் சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் சார்பில் உரையாற்றிய பேரவைத்தலைவர், அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயன்முறை குறித்து தமது வரவேற்பை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் நேற்று திங்கட்கிழமை (03) இலங்கை நேரப்படி பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமான அமர்வில், ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அதன் சமகால நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை பேரவைத்தலைவரால் வாசிக்கப்பட்டது.

அதன்படி இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தலில் பரந்துபட்ட மக்கள் ஆணையைப்பெற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறியதாகவும், புதிதாகத் தெரிவான பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப்பிரகடன உரையில் நாட்டில் நீண்டகாலமாக நிலவும் பிரிவினைகளைக் களைந்து, இனங்களுக்கு இடையில் தேசிய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றத் தயாராக இருப்பதாக உறுதியளித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுவதாக ஜனாதிபதியினால் அளிக்கப்பட்ட வாக்குறுதி குறித்து வரவேற்பு வெளியிடப்பட்டதுடன், இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்கவேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

அதேவேளை உண்மை மற்றும் நீதிக்காக நீண்டகாலமாகப் போராடிவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டதுடன், அவர்களுக்கான தீர்வை வழங்கக்கூடியவகையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செயற்திறனான முறையில் இயங்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்புச்சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் உரிய நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும் எனவும், வட, கிழக்கு மாகாணங்களில் சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்புக்கள் தொடர்வதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், அவை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு, சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் கோரப்பட்டது.

மேலும் நீண்டகாலமாக நிலவிவரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இதுவே சரியான தருணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயன்முறை குறித்து வரவேற்பு வெளியிடப்பட்டது.