திருமலை மாவட்டத்தில் 6 நாட்களுக்குள் 28 பேர் மரணம்: திருகோணமலை மாவட்டத்தில் செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை 28 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் 846 தொற்றாளர்கள் உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் கடந்த (06)வெளியிடப்பட்ட நாளாந்தம் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இதுவரைக்கும் 10 ஆயிரத்து 661 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 276 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும்,156 கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஒரு வயது முதல் ஐந்து வயது வரைலயான 164 சிறார்களும், 65 வயதுக்கு மேற்பட்ட 427 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் 9 பேர் இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரம் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பகுதியில் 2419 பேர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





