இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சரவை பேச்சாளர்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. உலக சந்தையில் விலை அதிகரித்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலும் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

இவ்வாறான போர் சூழல் ஏற்படும் போது எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பது வழமையானதாகும். எனவே உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்தால், அது இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் தற்போது அவ்வாறு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இதற்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் தான் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு அவற்றை உபயோகிக்க முடியும்.

அவற்றின் சராரியான விலைகளே தற்போது நடைமுறையிலுள்ளன. போர் சூழல் உக்கிரமடைந்து விலைகள் அதிகரித்தால், அவற்றுக்கேற்ப இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படும். தற்போது எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றார்.