ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோஷமாக இனவாதம் மாறிவிட்டது என்றும், வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நமது மிகப் பாரிய பலம் ஒற்றுமை என்றும், நமது நாட்டின் முக்கிய பலம் நாம் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நியங்கொட பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டை வலுவாகக் கட்டியெழுப்ப முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடந்த கால பாரம்பரியத்தின் அடிப்படையில், புதிய உலகத்திற்கு பொருத்தமான பொருளாதார மாற்றத்திற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் வலியுறுத்தினார்.
நம்மிடையே உள்ள முரண்பாடுகளையும் மோதல்களையும் வென்று நம்மை ஒரே தேசமாக கட்டியெழுப்ப வேண்டும்.
நீண்ட காலமாக, உள் மோதல்களால் நாம் பலவீனமடைந்தோம். உள் மோதல்கள் நமது பலத்தைக் குறைக்கின்றன. தற்போது முதல் முறையாக, இலங்கையில் ஒரு அரசாங்கம் வடக்கு மக்களின் கௌரவத்தையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு கொழும்பில் இயங்கும் அரசாங்கத்தின் மீது எப்போதும் சந்தேகங்கள் இருந்தன. தற்போது அந்த சந்தேகம் நீங்கியுள்ளது. இது ஒரு சிறந்த சூழ்நிலை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் இனவாத அரசியல் இயக்கங்களின் இருப்பு நின்றுவிட்டது. பிரதேசம் மற்றும் எல்லைகளால் ஒன்றுபட்டாலும் ஒரு நாடாக ஒன்றுபடாது. அந்த நாடு ஒன்றுபட, அந்த நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும். நமது நாட்டைக் கட்டியெழுப்பும் முக்கிய பணி இதுதான் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இனவாதத்தை யார் வேண்டுமானாலும் பரப்பலாம். இன்று மிகச் சிறிய குழுவே அதை செய்து கொண்டிருக்கிறது.
வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதத்திற்கு மீண்டும் இடம் கொடுக்க மாட்டோம்.
அதற்கு சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், சட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இனவாதத்திற்கு எதிராக நாங்கள் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. இரக்கம் மற்றும் கருணைக்கு முன்னுரிமை அளிக்கும் மதம் ஒரு மோதலாக மாறுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பௌத்த மதம் மற்றும் அனைத்து மதங்களின் பண்புகள் மற்றும் அடித்தளங்களைக் கொண்ட ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதற்காக போராடுகிறோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



