மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எவ்வித சட்டமும் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உள்ள சட்டம் ரத்து செய்யப்பட்டு, அதன் இடத்தில் தயாரிக்கப்பட்டு வந்த புதிய சட்டத் தொகுப்பு 2018 முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இதற்கு பாராளுமன்றமே முழுப் பொறுப்பு என்று வலியுறுத்தினார்.

எனவே, இந்த விடயத்தில் பாராளுமன்றமே ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தேர்தலைப் பற்றி மட்டும் பேசாமல், தொடர்புடைய சட்டத்தை விரைவில் நிறுவுவதில் உண்மையிலேயே ஆர்வம் காட்ட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயம், 2018இல் வழங்கப்பட்ட 50:50 கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மேலும் அதன் பணிகள் முடிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உட்பட முழு பாராளுமன்றமும் அதை எதிர்த்தது. பின்னர், சட்டத்தை உறுதி செய்ய முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட குழு நியமிக்கப்பட்டிருந்தாலும், பாராளுமன்றம் பிளவு அடைந்ததால் குறித்த செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

இதனடிப்படையில், சட்டம் இன்னும் நிறைவேறாததால், மாகாண சபை தேர்தல் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.