NPP அரசுக்குள் எந்தப் பிளவும் இல்லை: எமக்குப் பதவியைவிட கடமையே முக்கியம்!

“தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. என்பவற்றுக்கிடையில் எவ்வித பிளவும் இல்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் கூட எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. எமது அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ளாத தரப்பினரே வதந்திகளைப் பரப்புகின்றனர்.” என ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

தனது இந்திய விஜயத்துக்கு முன்னதாக அரசாங்க ஊடகத்தக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றுக்கிடையில் முரண்பாடு உள்ளது என வெளியாகும் தகவல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“நாம் சகோதரத்துவத்துடனேயே செயல்பட்டுவருகின்றோம். ஒருமித்த இலக்கை நோக்கியே எமது பயணம் உள்ளது. பதவி என்பதைவிட பொறுப்பு என்பதே எமக்கு முக்கியம்.

ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் இலக்கு ஒருமித்தாகவே உள்ளது.

பிரதமர் ஹரிணிக்கும் எனக்கும் இடையில்கூட மோதல் உள்ளது என கருத்து பரப்பினர். அவ்வாறு எதுவும் இல்லை. நாம் விவாதத்தில் ஈடுபட்டாலும் அது ஒருபோதும் மோதலாக மாறிதில்லை.

ஏனைய கட்சிகளைப்போல தனிநபர் செல்வாக்கு செலுத்தும் கட்சி அல்ல எமது கட்சி. நாம் என்ற சிந்தனை அடிப்படையிலேயே செயல்படுகின்றோம். எம்மிடையே கூட்டு பொறுப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.