அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றுள் சுவாச நோய்க்கான மருந்து, நுண்ணுயிர் கொல்லி, மயக்கமருந்து, வலி நிவாரணி, தொற்றாநோய்க்கான மருந்து, மற்றும் கண் நோய்களுக்கான மருந்து ஆகிய மருந்து வகைகளும் அடங்குவதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகளில் நோயாளர்களுக்கு சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்கத் தரமான மருந்து வகைகளைத் தொடர்ச்சியாக விநியோகிப்பது அவசியமாகும்.
இதன்படி, மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள், இரசாயன பரிசோதனைகளுக்கு அவசியமான உபகரணங்கள், கதிரியல் பரிசோதனைக்கான உபகரணங்கள் ஆகியவற்றை உரிய நேரத்தில் பெற்றுத்தருவது அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் பொறுப்பாகும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், தற்போது மருத்துவமனைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


