இன்னமும் தொடரும் அவசரகால வழிகாட்டல்களில் மனித உரிமைகளுக்கு ஒவ்வாத பல கூறுகள்!

பேரனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி, நிவாரண வழங்கல் மற்றும் மீட்சி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினாலும், இன்னமும் பிரச்சினைகள் நிலவுகின்றன.

அதுமாத்திரமன்றி தற்போதும் தொடரும் அவசரகால வழிகாட்டல்கள் மனித உரிமைகளுக்கு ஒவ்வாத மிகமோசமான கூறுகளை உள்ளடக்கியிருக்கின்றன என உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆசியப்பிராந்திய ஆய்வாளர் ரொபேர்டா மொய்ஸக் கரிசனை வெளியிட்டுள்ளார்.

‘டித்வா’ சூறாவளியை அடுத்து நாடு முகங்கொடுத்த மிகமோசமான இயற்கைப் பேரனர்த்தத்தின் பின்னரான தற்போதைய நிலைவரம் குறித்து அவர் எழுதியிருக்கும் கட்டுரையில் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய ‘தித்வா’ சூறாவளியினால் நாடு பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தது. இது 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இலங்கை முகங்கொடுத்த மிகமோசமான இயற்கைப் பேரிடராக அமைந்திருக்கின்றது. 2025 டிசம்பர் 8 ஆம் திகதி வரையான தரவுகளின் பிரகாரம் 635 பேர் உயிரிழந்திருப்பதுடன் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். அத்தோடு சுமார் 600,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதுடன் மொத்தமாக 2.1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று இப்பேரனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியில் உட்கட்டமைப்பு வசதிகள் வெகுவாக சிதைவடைந்திருப்பதுடன் சுமார் 247 கிலோமீற்றர் வீதிகள் மற்றும் 480 பாலங்கள் சேதமடைந்திருப்பதனால் போக்குவரத்து மற்றும் வலுசக்தி துறைகளும் குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அறிக்கையின் பிரகாரம் வெள்ளப்பெருக்கினால் சுமார் 1.1 மில்லியன் ஹெக்டேயர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டிருப்பதுடன், இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 20 சதவீதமாகும். அதுமாத்திரமன்றி இவ்வனர்த்தத்தினால் 720,000 கட்டடங்கள் சிதைவடைந்துள்ளன. அத்தோடு இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தோரில் பெரும்பாலானோர் இந்த சூறாவளிக்கு முன்னர் பின்தங்கிய மற்றும் நலிவுற்ற நிலைமைகளில் இருந்தவர்களாவர்.

நிலையற்ற வருமானம், உயர்வான கடன் மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான போதிய இயலுமை இன்மை போன்ற நெருக்கடிகளால் ஏற்கனவே சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த சமூகங்களே இப்போது வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் புத்தளம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அடங்குகின்றன. அதேவேளை இப்பகுதிகளில் தமிழ்மொழியே பரவலாகப் பேசப்பட்டாலும், சூறாவளி தொடர்பான அறிவிப்புக்கள் தமிழில் வெளியிடப்படவில்லை. இருப்பினும் சூறாவளி தாக்கியதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதில் சிவில் சமூக அமைப்புக்கள் முக்கிய பங்காற்றின.

பேரனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி, நிவாரண வழங்கல் மற்றும் மீட்சி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினாலும், இன்னமும் பிரச்சினைகள் நிலவுகின்றன. அதுமாத்திரமன்றி தற்போதும் தொடரும் அவசரகால வழிகாட்டல்கள் மனித உரிமைகளுக்கு ஒவ்வாத மிகமோசமான கூறுகளை உள்ளடக்கியிருக்கின்றன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.