அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பாதுகாப்பு அமைச்சினால் தான் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இன்றும் அவ்வாறான நிலைமையே காணப்படுகிறது. அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களே குற்றங்களை  விசாரிக்க முடியாது. சர்வதேச விசாரணைக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் கடந்த அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்துக்கும்  இடையே வித்தியாசம் ஏற்படாது. தமிழ் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ள வேண்டுமாயின் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளுங்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சு மற்றும்  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்  அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள்  பாதுகாப்பு அமைச்சை மிகவும் வெறுக்கின்றார்கள். இந்த அரசாங்கத்தில் மட்டுமல்ல முன்னாள் அரசாங்க காலத்தில் இருந்து அதனை வெறுக்கின்றனர். தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் அனைத்து துன்பங்களுக்கும் இந்த அமைச்சே பிரதான  காரணமாக இருக்கின்றது. யுத்தத்தின் போது மட்டுமல்ல, யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியிலும் அவ்வாறான நிலைமையே காணப்படுகிறது.

இராணுவத்தினர் வடக்கு மற்றும்  கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் விநியோகத்துடன் தொடர்புடையமை தொடர்பில் கூறியிருந்தேன். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வந்தால் அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.குறிப்பாக போதைப் பொருள் தொடர்பானவர்களை துரத்திச் செல்லும் போது அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் நுழைகின்றனர். பொலிஸில் முறையிட்டால் அதனை ஏற்க மறுக்கின்றனர். எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர். இதனை மறுத்தால் தமிழ் மக்கள் மேலும் மேலும் உங்களை சந்தேகிக்கும் நிலைமையே ஏற்படும். இது தொடர்பில் நடவடிக்கை அவசியமாகும்.

கடற்படையினர் வடக்கு கிழக்கில் கரையோரத்தில் இருக்கின்றனர். அங்கு சோதனை சாவடிகள் இருக்கின்றன. அவர்கள் யுத்த காலத்தில் கூட அவ்வாறு இருக்கவில்லை. யுத்தத்திற்கு பின்னர்தான் இங்கே போதைப்பொருள் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் நிர்வாகம் இருக்கும் போது இந்த போதைப் பொருள் இருக்கவில்லை. போதைப் பொருள் கடத்துபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு பயந்தனர். இந்நிலையில் இப்போது வடக்கு மற்றும்  கிழக்கில் போதைப்பொருள் பெருமளவில் பரவியுள்ளது. இதனை மறுக்கக்கூடாது.

இராணுவத்தினருக்கு எந்த சம்பந்தமும் இல்லையென பாதுகாப்பு பிரதி அமைச்சர்  மறுத்தாலும் அதனை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதேவேளை பொறுப்புக்கூறல் விடயத்தில் முறையான  தீர்வு ஏதும் எடுக்கப்படவில்லை.

யுத்தக் காலத்தில் போர் குற்ற மனித உரிமை மீறல்கள் நடந்தன என்பதனை அரசாங்கம்  ஏற்றுக்கொள்ள வேண்டும். இராணுவத்தினரின் ஊடாக வந்த காட்சி பதிவுகளே இப்போது சாட்சிகளாக மாறியுள்ளன. இராணுவத்தில் நியாயமாக சிந்திப்பவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினாலேயே அவர்கள் அதனை வெளியிட்டுள்ளனர்.

உண்மையை  கண்டறிய  வேண்டுமாயின்  விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். சர்வதேச விசாரணைகளுக்கு இணங்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் தொடர்பில் நீங்கள் நீதிமன்றத்திற்கு புறம்பாக தீர்ப்பளித்து அவர்களை கொன்றுள்ளீர்கள். அதன்போது மக்களையும் கொன்றுள்ளீர்கள். இதனையே இனப்படுகொலை என்கின்றோம்.

அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களே குற்றங்களை  விசாரிக்க முடியாது. சர்வதேச விசாரணைக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் கடந்த அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்துக்கும்  இடையே வித்தியாசம் ஏற்படாது.

அரசாங்கம் ஏன்  இந்த விடயத்தில் தயங்க வேண்டும். நீங்களும் இதில் பங்காளிகள் என்பதனாலேயே தயங்குகின்றீர்கள். நீங்கள் குற்ற உணர்வு உள்ளவர்களாக இருக்கக்கூடாது என்றால், தமிழ் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ள வேண்டும் என்றால்,  பழைய ஜே.வி.பி அல்ல. மாறியுள்ளீர்கள் என்றால் நான் குறிப்பிடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.