தமிழ் மக்களின் காயங்கள் ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்- “அரகலய ” போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுபுன் விஜேரத்ன

இலங்கையின் காலிமுகத்திடலில்  “அரகலய ” போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் சுபுன் விஜேரத்ன உடன் ஒரு நேர்காணல்.

* கேள்வி :- 

இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் என்ன கூறப் போகின்றீர்கள்?

பதில் :-

இலங்கையின் அரசியல் இப்போது சாக்கடையாகி இருக்கின்றது.ஒவ்வொரு அரசியல்வாதியும் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொண்டு எவ்வாறு முன்செல்வது? என்பது குறித்து சிந்தித்து, செயலாற்றி வருகின்றார்களே தவிர மக்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதாக இல்லை என்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.நாட்டு மக்கள் இன்று பல்வேறு துன்ப துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர்.மூன்று வேலை உணவை ஒரு வேலையாக சுருக்கிக் கொண்டு பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில் மக்கள் வருமானப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர்.போஷாக்கு நிலைமைகள் கேள்விக்குறியாகியுள்ளன.நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் பிறக்கின்ற ஒவ்வொரு பிள்ளையும் கடனாளியாகி இருக்கின்றது.எதிர்காலத்திலும் இந்நிலைமையில் மாற்றம் ஏற்படுமா? என்று சொல்ல முடியாதுள்ளது. நாட்டில் மின் கட்டணம் வேகமாக அதிகரித்துள்ளதோடு அடிக்கடி மின் வெட்டும் இடம்பெறுகின்றது.இதனால் தொழிற்றுறைகள் பலவும் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றன.

பொருளாதார பின்னடைவை இத்தகைய நிலைமைகள் மென்மேலும் அதிகப்படுத்துவதாகவே உள்ளன.கடந்த காலத்தில்  மத்திய வங்கி அதிகளவான பணத்தை அச்சிட்டு வெளியிட்டதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தோடு அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் அதிகரித்தது.இத்தகைய பல நிலைமைகள் காரணமாக மக்கள் விழிபிதுங்கி போயுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் இதற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்காது இருந்து வருவது வெட்கக்கேடான ஒரு செயலாகும்.

“அரகலய” என்ற எமது போராட்டம் இலங்கையில் புதிய அரசியல் புரட்சியை தொடக்கி வைத்தது.சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையினரைத் தூண்டிவிட்டு குளிர்காயும் கலாசாரம் இலங்கைக்கு புதியதல்ல.அண்மைக்காலம் வரை இதன் தாக்க விளைவுகள் இலங்கையை ஆட்கொண்டிருந்தன.எனினும் எமது “அரகலய” போராட்டத்தைத் தொடர்ந்து இந்த நிலைக்கு சாவுமணி அடிக்கப்பட்டிருக்கின்றது.நாட்டு மக்கள், இனியும் இனவாதிகள், இத்தகைய போக்குகளை முன்கொண்டு செல்வதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார்கள். “இலங்கையர்” என்ற பொது வரையறைக்குள் அனைவரும் நோக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி வருகின்றோம்.சாதி, மத, இன,மொழி ஆதிக்கம் களையப்பட வேண்டும் என்பதையே நாம் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றோம்.  “அரகலய ”  புதிய அத்தியாயங்களையும் எழுதியுள்ள நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்னும் அதிகமான பக்கங்கள் எஞ்சியுள்ளன.நாம் ஒரு போதும் எதற்கும் சளைக்கப்போவதில்லை.எத்தகைய அச்சுறுத்தல்கள் எத்தகைய வடிவத்தில் வந்தாலும் நாம் அதற்கு ஈடுகொடுத்து முன்னேறுவதற்கு உறுதி பூண்டுள்ளோம்.

இந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே  பெரும்பான்மை இனவாதிகள் உற்றுநோக்கி வருகின்றனர்.இந்தியா என்றால் இவர்களுக்கு வேப்பங்காயாக கசக்கின்றது.ஆனாலும் இந்தியா வழங்கும் உதவிகள் மட்டும் இவர்களுக்கு கரும்பாக இனிக்கின்றன.இத்தகையோரின் இரட்டை வேடம் களையப்படுதல் மிகவும் அவசியமாகும் என்பதோடு இந்தியா வழங்கும் பலதரப்பட்ட உதவிகளையும் நாம் பெரிதும் மதிக்கின்றோம் என்பதையும் இங்கு நினைவுபடுத்து விரும்புகின்றேன்.ஊழல்வாத ஆட்சியாளர்களால் நாடு இன்று கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றது.ஊழல்வாதிகள் தின்று கொழுத்து உல்லாச வாழ்க்கை வாழும் நிலையில் அப்பாவி மக்கள் பலிக்டாவாகி வருவது கொடுமையிலும் கொடுமையாகும்.

இலங்கையின் ராஜபக்ஷாக்களின் பொதுஜன பெரமுன கட்சி செல்வாக்கிழந்துள்ளது.எனினும் பாராளுமன்றத்தில் இக்கட்சியின் ஆதிக்கமே அதிகமுள்ளது என்பதும் தெரிந்த விடயமாகும்.இது ஒரு முறையற்ற, முரண்பாடான நிலையாகும்.பொதுமக்களின்  செல்வாக்கிழந்துள்ள பொதுஜன பெரமுன இன்னும் அரசியலில் கோலோச்சுவதோ அல்லது தீர்மானங்களை மேற்கொள்வதோ எவ்விதத்திலும் நியாயமானதாக இல்லை என்பதே உண்மையாகும்.இந்நிலையில் விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு நாட்டின் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவும் வேண்டியது அவசியமாகும்.

* கேள்வி :- அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக………

பதில்:- இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொடிய யுத்தம் இடம்பெற்றது.தமிழ் மக்கள் மீதான பல்வேறு புறக்கணிப்புக்கள் மற்றும் அடக்குமுறைகள் என்பன யுத்தத்தின் தோற்றுவாயாக அமைந்தன என்பதனை மறுப்பதற்கில்லை.யுத்தம் நாட்டின் பொருளாதாரத்தை விழுங்கியதோடு நாட்டின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்கக்கூடிய அப்பாவி உயிர்களையும் காவு கொண்டது.

இந்நிலையானது நாட்டின் எழுச்சியில் பல்வேறு தாக்க விளைவுகளையும் ஏற்படுத்தி இருந்தது.யுத்தத்தால் பாதிப்பிற்கு உள்ளான் தமிழ் மக்களின் காயங்கள் இன்னும் ஆறாத ஒரு நிலையே காணப்படுகின்றது.அவர்களின் காயங்கள் ஆற்றப்படுதல் வேண்டும்.தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கடந்த காலங்களில் முயற்சிகள் பலவும் மேற்கொள்ளப்பட்டன.1987 பண்டா – செல்வா உடன்படிக்கை, 1965 டட்லி – செல்வா உடன்படிக்கை இவற்றில் முக்கியமானதாகும்.எனினும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உள்ளிட்ட சிலரின் எதிர்ப்பினால் இம்முயற்சிகள் கை கூடவில்லை.

1985 திம்பு பேச்சுவார்த்தை ,ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.1987 இலங்கை – இந்திய உடன்படிக்கை குறித்தும் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இருந்தன.இன்னும் இருந்தும் வருகின்றன.இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு இதயசுத்தியுடன் ஆட்சியாளர்கள் செயற்பட்டார்களா? என்பது குறித்தும் பலர் சந்தேகமெழுப்பியுள்ளமையும் தெரிந்ததேயாகும்.2006 – 2008 வரை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினரின் சந்திப்பு இடம்பெற்றது.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான ஒரு தென்பகுதி இணக்கப்பாட்டினை காணும் நோக்குடன் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது.63 தடவைகள் கூடிய இந்தக் குழு 2008 ம் ஆண்டு ஜனவரி 23 ம் திகதி பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பக்க யோசனையை முன்வைத்திருந்தமையும் நீங்கள் அறிந்ததேயாகும்.இது ஒரு இழுத்தடிப்பு நடவடிக்கை என்று பலர் பேசிக் கொண்டதையும் காதுபட கேட்கக் கூடியதாகவிருந்தது.

இளைஞர்கள் பலர் அரசியல் கைதிகளாக பல்லாண்டுகளாக சிறைகளில் வாடுகின்றனர்.இவர்களின் இளமைப்பருவம் சிறைக்குள்ளேயே முடங்கிப்போயுள்ளது.நாட்டிற்கு தோள் கொடுக்க வேண்டிய ஒரு கூட்டத்தினர் இவ்வாறாக சிறைகளில் தமது வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருப்பது நியாயமானதல்ல.இவர்கள் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்படுதல் வேண்டும்.இழுபறி நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு இடமளிக்கக் கூடாது.இளைஞர்களின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவதோடு தேசிய நீரோட்டத்தில் இணைந்து செயற்படவும், நாட்டின் அபிவிருத்தியில் பங்காளிகள் ஆவதற்கும் வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.

இலங்கை தற்போது  பல்வேறு சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இனியும் இனவாதம் பேசி நாட்டை மேலும் சீர்குலைக்க முனையாமல், இனவாதிகள் தம்மை திருத்திக் கொண்டு ஐக்கியத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.