ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 58 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்னும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் முன்னேற்றங்கள் தொடர்பில் அதன் தலைவர் வோல்கர் டேர்கின் வாய்மொழி மூலமான அறிக்கை கடந்த திங்கட்கிழமை(3) வெளியிடப்பட்டுள்ளது.
வழமைபோலவே இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு புதிய அரசின் வரவு ஒரு சரியான சந்தர்ப்பம் என தெரிவித்துள்ளார் டேர்க். அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் நோக் கத்துடன் இலங்கை அரசுகள் காலம் காலமாக அமைத்து வரும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமல்போனோர் அலுவலகம் போன்றவற்றையும் அவர் வரவேற்றத் தவறவில்லை.
அதேசமயம், இலங்கையில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தப்போவதாக தெரிவித்த அனுர அரசின் கொள்கைகளையும் அவர் பாராட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புதிய அரசு மேற்கொள்ளும் விசாரணைகளை பாராட்டியுள்ள அவர் கடந்த கால மனித உரிமைகள் மீறல்கள் குறித்த சுயாதீன விசாரணைகளுக்கும் வலியுறுத்தியிருந்தார்.
வலிந்து காணாமல்போனோர் தொடர்பில் அதன் நடைமுறைகளை மீண்டும் இலங்கை அரசு அமைத்துள்ள செயற்திறனற்ற காணாமல்போனோர் அலுவலகத்திடம் விட்டுவிட்டார். பயங்கரவாதத் தடுப்புச்சட்டம், நிகழ்நிலைக் காப்புச்சட்டம் ஆகியன திருத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர் வடக்கு கிழக்கில் பொது அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் மீதான இலங்கை அரசின் கண்காணிப்புக்கள் தொடர்பிலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதாவது இந்த அறிக்கையில் எதுவும் புதிதாக இல்லை என்பதுடன், தமிழர்கள் என்ற சொல்லும் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையினுள் ஏதோ கலவரம் ஏற்பட்டது போலவே வழமைபோல சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தமது பூகோள அரசியல் நலன் களுக்காக அமெரிக்கா தலமையில் இலங்கை மீது தீர்மானத்தை கொண்டுவந்த இணைத்தலமை நாடுக ளான பிரித்தானியா, கனடா. மலாவி, வடமசடோனியா, மொன்ரோநீக்ரோ ஆகிய நாடுகள் சார்பில் பிரித்தானியாவின் ஐ.நாவுக்கான தூதுவர் எலியனொர் சான்டேர்ஸ் வெளியிட்ட அறிக்கையிலும் தமிழ் மக்கள் மீதன இனஅழிப்பு அல்லது அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள், தொடர்ந்து இடம்பெறும் அடக்குமுறைகள் குறித்து எதுவும் இடம்பெறவில்லை.
வோல்கரின் அறிக்கையை வரவேற்றுள்ள இணைத்தலமை நாடுகள், இலங்கையின் புதிய அரசை பாராட்டியுள்ளதுடன், காணிகளை விடுவிப்பது, இனநல்லிணக்கப்பாடு, வடக்கு கிழக்கில் இறந்தவர்
களை நினைவுகூருவதை அனுமதிப்பது, வீதித் தடைகளை அகற்றுவது குறித்து தெரிவித்துள்ளது. இவ ற்றை
புதிய அரசு செய்ய முற்படுவதை வரவேற்றுள்ளது.
இலங்கையின் அரசியல் யாப்புக்கு உட்பட்டு அதிகாரங்களை பரவலாக்கவேண்டும், பயங்கர
வாதத் தடைச்சட்டத்தை மாற்றவேண்டும், அதன் மூலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடு
தலை செய்யவேண்டும் அனைத்துலக விதிகளுக்கு அமைவாக பொறுப்புக்கு கூறல் மற்றும் இன நல்லிணக்கப்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உள்நாட்டு பொறிமுறை
கள் மூலம் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப் படுவதை ஊக்கு
விப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதாவது கடந்த ஆண்டு வெளிவந்த அறிக்கைக் கும் அல்லது காலம் காலமாக கடந்த 14 வருடங்களில் வெளிவந்த அறிக்கைகளுக்கும் தற்போதைய இரண்டு அறிக்கைகளுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை என்பதுடன், எந்தவித முன்னகர்வும் இன்றி இருப்பதுடன், அது தொடர்பில் அனுத்துலக சமூகமோ இல்லை ஐக்கிய நாடுகள் சபையோ அக்கறை காண்பிக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
மேலும் தமிழ் மக்களின் விவகாரம் உலகில் எங்கும் எந்தவொரு கவனத்தையும் ஈர்க்கவில்லை என்பது மட்டுமல்லாது, மெல்ல மெல்ல நாம் ஒரு தேசத்துக்குரிய மக்கள் என்பதை இந்த அனைத்துலக சமூகமும் மறந்துவருவதைத் தான் இது காட்டுகின்றது. எமது இந்த தோல்விக்கு தமது சொந்த பெருமைகளுக்காகவும், பெயருக் காகவும், விழா எடுப்பதற்காகவும் இயங்கும் புலம்பெயர் அமைப்புக்களும், செயற்திறனற்ற தாயகத்து தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் தார்மீகபொறுப்பை ஏற்க வேண்டும் என்பது தான் யதார்த்தம்.


