உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மை வெகுவிரைவில் வெளிவரும்: JVP

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மை வெகுவிரைவில் வெளிவரும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் இன்று பொருளாதார மேம்பாடு பற்றி பேசுகிறார்கள்”. “பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடுமையாக செயற்படவேண்டும். அனைவரும் அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய எதிர்க்கட்சியினர் இன்று அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். இன்று தூய்மையானவர்களை போன்று ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள். ஒரு குடும்பத்தின் ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னரும் அவர்கள் ஊழல் பற்றி பேசுவது ஆச்சரியமாக உள்ளது. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி அதில் சுகபோகமாக வாழும் மனநிலை அரசாங்கத்தில் எவருக்கும் இல்லை. ஏனெனில் இது மக்களாட்சி அரசாங்கம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பவம் பற்றி முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பிரதான சூத்திரதாரிகள், பிரதான சூத்திரதாரி யார்? என்பது பற்றி நூல் வெளியிடுகிறார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

நூல் வெளியீட்டு நிகழ்வுக்குப் பல பிரதான சூத்திரதாரிகள் சென்றிருந்தார்கள். அரசாங்கத்தின் மீது திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு ஒருபோதும் பலவீனமடைய போவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.