பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள கிழக்கு ஆபிரிக்க நாடுகள்- பகுதி 1

கிழக்கு ஆபிரிக்காவில் கடும் வரட்சியின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் பட்டினிச்சாவைத் தற்போது எதிர்கொண்டிருக்கிறார்கள்.

இவ்விடயத்தை முதன்மைப்படுத்தி, அதாவது கிழக்கு ஆபிரிக்காவில் பல மில்லியன் எண்ணிக்கையிலான மக்கள் போதிய உணவின்றி பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக அனைத்துலக சுகாதார தாபனம் எச்சரிக்கையை வெளியிட்டிருக்கின்றது.

“வரட்சி, காலநிலை மாற்றம், விலைவாசி உயர்வு, அத்துடன் வடக்கு எத்தியோப்பியாவில் தற்போது நடைபெற்றுவருகின்ற போர் போன்ற காரணங்களினால் அங்கு உணவு நிலைமை மிக விரைவாக மோசமான நிலையை அடைந்துகொண்டிருக்கிறது” என்று அனைத்துலக சுகாதார தாபனத்தின் (WHO) உயர் இயக்குநரான (Director General) தெட்ரோஸ் அதானொம் கெப்ரியேசுஸ் (Tedros Adhanom Ghebreyesus) ஜெனிவாவில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

‘ஆபிரிக்காவின் கொம்பு’  (Horn of Africa) என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் உள்ள நாடுகளான திஜிபூட்டி, எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தென் சூடான், சூடான், உகாண்டா ஆகிய ஏழு நாடுகளில் பல மில்லியன் கணக்கிலான மக்கள் நோயையும் பட்டினிச்சாவையும் எதிர்கொண்டுவருகிறார்கள்.”

“வரட்சி, போர், காலநிலை மாற்றம், உணவுப் பொருட்கள், உரவகைகள், எரிபொருள் என்பவற்றின் அசாதாரண விலை உயர்வு காரணமாக போதிய உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் அங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்.”

“பசியும் ஊட்டச்சத்துக் குறைபாடும் உடல் ஆரோக்கியத்துக்கு உடனடி ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலை இருக்கும் அதே வேளையில், அவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்தி, நியூமோனியா, சின்னமுத்து, வாந்திபேதி போன்ற நோய்கள் அந்த மக்களைப் பாதிக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

உணவுப் பற்றாக்குறையின் காரணமாக, உணவையும் மருத்துவ சேவையையும் சமகாலத்தில் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இந்த மக்கள் இருக்கிறார்கள்.

உணவைத் தேடி ஏராளமான மக்கள் தமது இல்லிடங்களை விட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடம்பெயர்வுகளின் காரணமாக பல நோய்களால் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் மருத்துவ சேவைகளை உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும் இந்த மக்கள் இருக்கிறார்கள்.

கிழக்கு ஆபிரிக்காவில் வாழும் ‘50 மில்லியன் எண்ணிக்கைக்கு மேற்பட்ட மக்கள் உணவின்மையால் இவ்வருடம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்’ என உலக உணவுத் திட்டமும், உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணைந்து ஜூலை மாத இறுதியில் மேற்கொண்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

ஏறத்தாழ ஏழு மில்லியன் எண்ணிக்கையிலான சிறுவர்கள், ஊட்டச்சத்துக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு;க்கொண்டிருக்கும் அதே நேரம், ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் கூற்றுப்படி, உணவையும், வாழ்வாதாரத்தையும் தேடி பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது இல்லங்களை விட்டு இடம்பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள். திஜிபூட்டி, எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தென் சூடான், சூடான், உகாண்டா போன்ற நாடுகள் இதற்குள் உள்ளடங்குகின்றன.

“செய்மதித் தரவுகள் பெறக்கூடிய கடந்த 40 வருடங்களில் என்றுமே காணாதவாறு, ஆபிரிக்காவின் இந்தக் கொம்புப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக நான்கு மழைக்காலங்கள் பொய்த்திருக்கின்றன” என்று உணவு மற்றும் விவசாய அமைப்பைச் சேர்ந்த கிமிம்பா டேவிட் பிரி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

நிலைமை படிப்படியாக மோசமாகிக் கொண்டு வந்ததன் காரணத்தால் எச்சரிக்கைகளும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருந்தன. “எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா போன்ற நாடுகளின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான வரட்சியின் பிடியில் தற்போது அகப்பட்டுள்ளதாக ஓர் பௌதீகப் புவியியலாளரான டேவிட் நாஷ் என்பவர் ‘கொண்வசேஷன்’ (Conversation) என்ற இதழில் எழுதிய ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆபிரிக்காவின் கொம்புப் பிரதேசத்தில் ஒவ்வொரு வருடமும் இரு தடவைகள் மழைவீழ்ச்சி கிடைக்கும். ஆனால் கடந்த நான்கு மழைக்காலங்களில் அங்கு மழை பெய்யவில்லை. சோமாலியாவின் சில பிரதேசங்கள் கடந்த இரண்டு வருடங்களாக எந்தவிதமான மழைவீழ்ச்சியும் ஏற்படவில்லை என்று றொயிற்றேஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்தது.

“இந்த வானிலை வரட்சியின் காரணமாக மண் தனது ஈரப்பதனை இழந்துவிடுகிறது. இதனால் கால்வாய்களும் வரண்டுவிடுகின்றன. இக்காரணங்களினால் பல இலட்சக்கணக்கான கால்நடைகள் இறந்துவிட்டன” என்று பிரைட்டன் இதழ் தெரிவித்தது. இவ்வருடம் செப்டெம்பர் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடையிலான காலப்பகுதியிலும் மழைக்காலம் மீண்டும் பொய்க்கலாம் என்று எதிர்வுகூறப்படுகின்றது. அவ்வாறு நடக்குமாயின் வரலாற்றில் முன்னெப்போதும் ஏற்பட்டிருக்காத 5 பருவ வரட்சியாக அது மாறும்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக வரட்சி ஏற்படக்கூடிய சூழல் இன்னும் அதிகமாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் வெப்பமான காற்றின் காரணமாக நீர் ஆவியாகும் தன்மை அதிகரிப்பதனால், இயற்கையான நீர்ச் சுழற்சி குழம்புகின்றது.
“காலநிலை மாற்றமும் லா நின்யாவும் (La nina) இணைந்து கிழக்கு ஆபிரிக்காவில் முன்னெப்போதும் இல்லாதவாறு பலபருவ வரட்சியைத் தோற்றுவித்திருக்கிறது. கடந்த 70 வருடங்களில் கண்டிராதவாறு, மார்ச் – மேமாத மழைவீழ்ச்சி பொய்த்ததன் காரணத்தினால் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கின்றது” என்று ஐக்கிய நாடுகளின் செய்திச் சேவை கடந்த மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.

சோமாலியா
இந்த வரட்சியின் காரணமாகப் அறுவடைகளும் கால்நடைகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சோமாலியாவில் இவ்வாண்டு மரக்கறி மற்றும் தானிய உற்பத்திகள் ஏறத்தாழ 80 வீதத்தால் வீழ்ச்சியடையக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

கோதுமை இறக்குமதிக்காக யூக்ரேனிலும் (70 வீதம்) ரஷ்யாவிலும் (30 வீதம்) சோமாலியா முற்றுமுழுதாகத் தங்கியிருப்பதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனமான வெளிநாட்டுக் கொள்கை ஆய்வு அமைப்பு தெரிவிக்கிறது.

இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவான அல்-ஷபாப் (Al-Shabab) சோமாலியாவின் 20 வீதமான பிரதேசத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. டிசம்பர் 2020 இல் ட்ரம்ப் நிர்வாகம் அந்த நாட்டிலிருந்து தமது துருப்புகளை மீள அழைத்ததன் பின்னர் அல்-ஷபாப் அமைப்பு அந்த நாட்டில் தனது தாக்குதல்களை அதிகரித்திருக்கிறது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் பைடன் நிர்வாகம் 500 இராணுவ வீரர்களை மீண்டும் அந்த நாட்டுக்கு அனுப்பியிருக்கிறது.

எத்தியோப்பியா

எத்தியோப்பியாவின் ரிக்றே (Tigray) பிரதேசத்தில் அரச இராணுவமும் அந்த இனத்தைச் சேர்ந்த வேறு இராணுவம் மற்றும் எரித்திரிய இராணுவம் என்பன இணைந்து ரிக்றே மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராகப் போரிட்டு வருகின்றன. ஒரு அரசியற்கட்சியான இந்த அமைப்பை எத்தியோப்பிய அரசு ஒரு பயங்கரவாத அமைப்பாகவே கருதுகிறது.

“எத்தியோப்பியாவின் ரிக்றேப் பிரதேசத்தில் அங்கு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள பேரிடரை அங்கு நிலவும் வரட்சி மேலும் மோசமாக்கியிருக்கிறது. இந்தப் பிரதேசத்தில் 60 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் எத்தியோப்பிய மற்றும் எரித்திரிய படைகளினால் கடந்த 21 மாதங்களாக எந்தவொரு தொலைத்தொடர்போ, வங்கிச்சேவையோ, போதிய மின்வசதியோ இன்றி முழுமையான முற்றுகைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான நிலைமையின் காரணமாக மலேரியா, அந்திராக்ஸ், வாந்திபேதி, போன்ற இன்னும் பல நோய்களால் ரிக்றேப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கற்பனை செய்யமுடியாத இந்தக் கொடூரம் மிக விரைவில் ஒரு முடிவுக்கு வரவேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்துதே இதற்கான ஒரேயொரு தீர்வாகும்.

இந்த மாதத் தொடக்கத்தில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளையும் அமைப்புகளையும் சார்ந்த பிரதிநிதிகள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடக்குவதற்காக அப்பிரதேசத்துக்குச் சென்றிருந்தார்கள்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் மின்வசதி, தொலைத்தொடர்பு வசதி, வங்கி மற்றும் ஏனை அடிப்படைச் சேவைகள் அங்கு உடனடியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எத்தியோப்பிய அரசு இதற்கு உடன்படவில்லை.

கடந்த மார்ச்ச மாதம் மனிதாயப் போர்நிறுத்தம் அங்கு ஏற்படுத்தப்பட்ட பின்னர் ரிக்றேப் பிரதேசத்துக்கு ஓரளவு மனிதநேய உதவிகள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருக்கும் தேவைகளுடன் ஒப்பிடும் போது இந்த உதவிகள் எவ்விதத்திலும் போதுமானவையல்ல.

இதுமட்டுமன்றி, எரிபொருள் மற்றும் பணப்பற்றாக்குறைகளின் காரணமாக உதவிப்பொருட்களை வழங்கும் நடவடிக்கைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் நோய்த்தொற்றுகள், கோவிட்டுக்கான தடுப்பூசிகள் வழங்குதல் என்பவற்றுடன்  ஏனைய உயிர்காப்புச் சேவைகளை அனைத்துலக சுகாதார அமைப்பு முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளது” என்று அனைத்துலக சுகாதார அபைப்பின் இயக்குர் நாயகம் மேலும் தெரிவித்திருக்கிறார்.

தமிழில்: ஜெயந்திரன்

நன்றி: அல்ஜசீரா