மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது என்றும் மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என்றும் தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிரான அம்மாவட்ட மக்களது உண்மையான நீதியான போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அல்லது அது சட்ட விரோதமானது என்று கருதியிருந்தால் அதில் ஈடுபட்ட மக்களை சட்ட ரீதியாக கைது செய்திருக்க வேண்டும்.
மாறாக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது என்று என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் பொது மக்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்களுடன் கலந்துரையாடுவது அவசியம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை முன்னெடுக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், மன்னார் காற்றாலை திட்டத்துக்கான ஜனாதிபதி செயலாளரின் உத்தரவு மக்களின் விருப்பங்களை நேரடியாக பாதிப்பதாக அந்த பதிவில் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இதனிடையே, அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு எதிராக பொலிஸார் கடுமையாக நடந்துக்கொண்டமையை கண்டிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியில் இருந்த போது, வெளிநாட்டு முதலீடுகளை எதிர்த்து குரல் கொடுத்த தேசிய மக்கள் சக்தி, தற்போது ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பதை கண்டிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.