மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் (01) 30ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கற்கடந்த குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு நீதியை கோரி இருந்தனர். மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகின்ற போராட்டத்துக்கு இன்றும் ஏராளமானோர் ஆதரவை வழங்கியிருந்தனர்.
‘காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும்’, ‘நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு’, ‘அரசே எமது உயிரோடு விளையாடதே’, ‘சொந்த மண்ணிலே அகதியாகும் நிலை வேண்டாம்’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் இருந்து மன்னார் மாவட்ட செயலகம் வரை பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று மக்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.



