இலங்கையில் அவசரகாலச் சட்டம் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்-துரைசாமி நடராஜா

அவசரகாலச் சட்டம் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்

இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து பல்வேறு அதிர்வலைகளை சர்வதேசமும் பொதுமக்களும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இளைஞர்களின் அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஒடுக்குவதற்கான ஒரு முயற்சியே  இதுவாகும் என்று கண்டனங்கள் மேலெழுந்து வருகின்றன.எனினும் மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காகவே அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. இதன் உண்மை நிலை குறித்து வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகமாகவே காணப்படுகின்றது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரித அதிகரிப்பினைக் கண்டு வரும் நிலையில் சில வர்த்தகர்கள் உச்ச இலாபத்தை கருத்தில் கொண்டு பதுக்கல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொருட்களுக்கான தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது.

இதனிடையே இலங்கையின் அரசியல் குழப்ப நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதன் எதிரொலியாக கடந்த வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினர் பல்வேறு எதிர்ப்பு செயற்பாடுகளையும் வெளிப்படுத்தினர்.

சபாநாயகரின் அறைக்குள் சென்ற எதிர்க்கட்சியினர், எதிர்க்கட்சி சமர்ப்பித்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையை துரிதமாக பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று சபாநாயகரைக் கேட்டுக் கொண்டனர். இதன்போது சபாநாயகர் ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்ளக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்டி இருந்தார்.

இந்நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இலங்கையின் அரசியல் கொந்தளிப்பை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் இயல்பு நிலையை உறுதிப்படுத்தி மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளது.இதனடிப்படையில் இடைக்கால அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பங்கேற்பில்லாத இடைக்கால நிர்வாக சபையின் அவசியத்தை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆலோசனை திட்டத்திற்கு அமைய தேசிய ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு சஜித் பிரேமதாசாவின் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவித்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கனுப்பும் நோக்கிலான இளைஞர்களின் போராட்டம் தற்போது உச்ச கட்டத்தை அடைந்திருக்கின்றது.பாராளுமன்றம், அலரி மாளிகை, காலிமுகத்திடல் என்று பல இடங்களிலும் இளைஞர்கள் உக்கிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது ஜனநாயக பண்புகளைக் தழுவிய ஒரு போராட்டமாக அமைந்திருக்கின்றது.

இது குறித்து பலரும் தமது பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.தொடர்ந்தும் ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதனிடையே  இளைஞர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் பல்வேறு காய் நகர்த்தல்களும் இடம்பெற்று வருகின்றன.இளைஞர்களின் ஐக்கியத்தை சீர்குலைத்து, அவர்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

எனினும் இளைஞர்கள் இதற்கெல்லாம் வழிவிடுவதாக இல்லை.இலக்கு நோக்கிய நகர்வில் அவர்கள் உறுதியுடன் செயற்படுகின்றனர். தமக்கெதிராக எத்தனை இடையூறுகள் வந்தாலும் அவற்றை சமாளித்து முன்னேறும் திறமை மற்றும் உள உறுதிப்பாடு அவர்களிடம் காணப்படுகின்றமை ஒரு சிறப்பம்சமேயாகும்.

இலங்கை அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை (06) நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கைக்கையானது  இளைஞர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் அல்லது மழுங்கடிக்கும் ஒரு நடவடிக்கையாகுமென்பது அரசியல் அவதானிகளின் கருத்தாக இருந்து வருகின்றது. இதனடிப்படையில் நாட்டின் சமகால பிரச்சினைகளுக்கு அவசரகாலச் சட்டம் ஒரு தீர்வாக அமையமாட்டாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட மேற்குல நாடுகளில் துாதுவர்கள்  ஆணித்தரமாக தெரிவித்திருக்கின்றன. மேலும் நாட்டில் அரசியல் ஸ்திரப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு அவசரகாலச் சட்டம் எந்த விதத்திலும் கை கொடுக்கப் போவதில்லை.

கோஷமிடுவதும் கோரிக்கைகளை முன்வைப்பதும்  போராட்டங்களில் ஈடுபடுவதும் ஒவ்வொருவரினதும உரிமையாகும். அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி இதனைப் பறித்தெடுப்பது நியாயமாகாது. எனவே உடனடியாக அவசரகால சட்டத்தின் அமுலாக்கத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபயவிடம் இச்சங்கம் வலியுறுத்தி இருக்கின்றது. அரசாங்கம் அவசரகால கால சட்டத்தைக் கொண்டு வந்து இராணுவத்தை பயன்படுத்தி இளைஞர்களின் போராட்டத்தை ஒடுக்க முனைகின்றது. ஜனாதிபதி பதவியை தக்க வைத்துக் கொள்ள ராஜபக்ச குடும்பத்தினர் எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள்.

முழு நாடும் ஒன்றிணைந்து முன்னெடுக்கின்ற பொதுவான போராட்டத்தை அவசரகால சட்டத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்தி விட முடியாது. ஜனாதியையும் முழு ராஜபக்ஷாக்களையும் வீட்டுக்கு அனுப்பும் முனைப்பில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதி, பிரதமர் மஹிந்தவை மட்டுமே பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு கோரி தான் ஆட்சியில் இருக்க முனைவது நகைப்புக்கிடமானதாகும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.

இதேவேளை 113 பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை நிறைவேற்றிக் காட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் சவால் விடுத்திருக்கின்றது.தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புக்களும் அவசரகால சட்ட  அமுலாக்கத்தை வன்மையாக கண்டித்திருக்கின்றன.நாடு நல்ல முறையில் மேலெழும்புவதற்கு ராஜபக்ஷாக்கள் பதவியில் இருந்து விலக வேண்டியதன் அவசியத்தையும் இவ்வமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

அவசரகால சட்டத்தை துரிதமாக அமுல்படுத்தியமையின் ஏதுநிலை தொடர்பில் தமக்கு விளக்கமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் சங்கம் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை விசாரணைக்கு அழைத்திருக்கின்றது.

இதேவேளை சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் அவசர கால சட்ட அமுலாக்கம் தொடர்பில் தமது அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளன.இலங்கையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியமை தீர்வாகாது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கின்றது.

இலங்கையின் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்  விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், இந்த வேளையில் சாதாரண மக்களின் கோரிக்கைகளை செவிமடுப்பது முக்கியமானதாகும். இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு நீண்ட கால செயற்பாடுகள் அவசியமாகும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறித்து நாம் கவலையடைகின்றோம். அண்மைக்காலமாக இலங்கையில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் சமாதானமான முறையில் இடம்பெற்று வருகின்றன.இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியமாகும். அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை வெற்றி கொள்வதற்கு பிரதான அவதானம் செலுத்தப்பட வேண்டும்” என்று நியூசிலாந்து தூதுவர் மைக்கல் வலியுறுத்தி இருக்கின்றார்.

இதனிடையே மக்களின் பாதுகாப்பு, நாட்டின் உறுதிப்பாடு, பொது மக்கள் சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சேவைகளை சிறப்பாக முன்னெடுத்தல் என்பவற்றை கருத்தில் கொண்டு அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பில் கருத்துக்கள் பலவற்றையும் வெளிப்படுத்தி இருக்கின்றது. இது ஒரு தற்காலிக செயற்பாடே என்றும் நாடு சகல துறைகளிலும் வழமைக்கு திரும்பியவுடன் அவசரகால சட்டத்தை விலக்கிக் கொள்ள உள்ளதாகவும்  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து 10 நாட்களுக்குள் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ளும் போதே ஒரு மாத காலத்திற்கு அது வலுவுடையதாக இருக்கும். இல்லையேல் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்ட 14 நாட்களுக்குள் அது வலுவிழந்துவிடும். இதனிடேயே மீண்டும் பாராளுமன்றம் எதிர்வரும் 17 ம் திகதி  செவ்வாய்க்கிழமையே கூடவுள்ளமையும் நோக்கத்தக்கதாகும். இந்நிலையில் அவசரகால சட்டத்தின் நடைமுறை சாத்தியப்பாடுகள் எந்தளவுக்கு பயன்தரப் போகின்றன என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

எவ்வாறெனினும் இளைஞர்கள் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கும் நியாயமான போராட்டத்திற்கு அவசரகாலச் சட்டம் ஒரு தடையாக அமைந்துவிடக் கூடாது என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும் என்பதனையும் மறுப்பதற்கில்லை.

Tamil News