இலங்கையில் தமிழர்கள் உயிர் நீத்தமைக்கான காரணம் இன்னமும் தீர்க்கப்படவில்லை -தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு வலியுறுத்தல்

இலங்கை அதன் 75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பை சந்தித்திருக்கிறது. இருப்பினும், அந்த இழப்புக்கான அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு, தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நிலையான அரசியல் தீர்வொன்றை இலங்கை கண்டடைவதை உறுதி செய்யுமாறு பிரிட்டன் அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரிட்டன்வாழ் தமிழர்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவினால் இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வடக்கு, கிழக்கில் தொடர்ந்து நிகழும் இராணுவமயமாக்கல், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பன தொடர்பில் நீதி, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை, தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வினை அடைவதில் ஏற்பட்டுள்ள தோல்வி ஆகிய விடயங்களை முன்னிறுத்தி இலங்கையின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணித்துள்ள வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம்.

அதேவேளை இலங்கை அரசாங்கத்தின் அதிகரித்துவரும் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் போராட்டக்காரர்கள் தொடர்பில் நாம் எமது கரிசனையையும் வெளிப்படுத்துகின்றோம்.

இலங்கை மிகத் தீவிரமான பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையிலேயே இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.

உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்ற வேளையில், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக இலங்கை அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

இலங்கையின் அரச கட்டமைப்பானது அதன் மக்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கின்ற போதிலும், ஏற்கனவே வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான சம்பவங்கள், காணி அபகரிப்பு மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வட, கிழக்கு வாழ் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகள் இன்னமும் தொடர்கின்றன.

சுதந்திர தின நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு இடம்பெறும் அதேசமயம், வடக்கு, கிழக்கில் மேலோங்கியுள்ள இராணுவமயமாக்கமானது தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

சிவில் மக்களின் செயற்பாடுகளில் தொடர்புபட முடியுமென பிரிட்டனில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையை விடவும் இரு மடங்கு இராணுவத்தினர் இலங்கையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிரான மீறல்கள், கண்காணிப்புக்கள், ஒடுக்குமுறைகள் என்பனவும் தொடர்கின்றன.

அதுமாத்திரமன்றி, தமிழ் மக்கள் பொருளாதாரத்திலிருந்து புறந்தள்ளப்படுவதுடன் அவர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, வணக்கஸ்தலங்கள் அழிக்கப்படுகின்றன.

இவற்றுக்கு மத்தியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

கடந்த 75 வருட காலமாக இலங்கையின் அரசாங்கங்கள் நியாயமானதும் சமத்துவமானதுமான ஆட்சி நிர்வாகம் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றுக்கப்பால் சிங்கள பௌத்த தேசிய வாதத்தை மேலோங்கச் செய்வதற்கே அதிக முக்கியத்துவம் வழங்கி வந்திருக்கின்றன. அது நாட்டில் இனப் பிரச்சினை தோற்றம் பெறுவதற்கும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஸ்திரமற்ற தன்மை என்பன உருவாவதற்கும் வழிவகுத்துள்ளது.

இலங்கை அதன் 75 வருடகால வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் இழப்பை சந்தித்திருக்கின்றது. இருப்பினும், அந்த இழப்புக்கான அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றது.

எனவே, நியாயமான ஆட்சி நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதுடன், ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் நாட்டை முன்னகர்த்திச் செல்லக்கூடியவாறாக இலங்கையின் அரச கட்டமைப்பு மாற்றமடைய வேண்டும் என்பது தெளிவாகிறது.

அந்த வகையில் இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல்கள் மற்றும் இனப்படுகொலை என்பன தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை உறுதி செய்யுமாறு எமது அரசாங்கத்திடமும் ஏனைய சர்வதேச பங்காளிகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோன்று தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நிலையான அரசியல் தீர்வொன்றை இலங்கை கண்டடைவதை உறுதிப்படுத்துமாறும் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.