மலையக மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவற்றுக்கான தீர்வு கானல் நீராகிக் கொண்டிருக்கின்றது.
அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே காணப்படும் ஐக்கியமற்ற, இழுபறி நிலைமைகள் பிரச்சினைகளுக்கான தீர்வினை அசாத்தியமாக்கி வருகின்றன. இதனிடையே மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறையான திட்ட வரைவு அரசாங்கத்திடம் முன்வைக்கப்படுவதோடு எந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறியபோதும் மலையக கட்சிகள் ஐக்கியத்துடனான உரிய அழுத்தத்தின் ஊடாக அவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்துகின்றனர்.
மலையக மக்கள் இந்த நாட்டிற்கு வருகை தந்து அடுத்த ஆண்டுடன் 200 வருடகால வரலாற்றை எட்டிப் பிடித்துள்ளனர்.இந்த காலப்பகுதியில் இவர்கள் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல.”சாண் ஏறினால் முழம் சறுக்கும்” நிலையிலேயே இவர்களின் வாழ்க்கைப் போக்குகள் அமைந்திருந்தன.1948 ம் ஆண்டில் இம்மக்களின் வாக்குரிமையையும் பிரசாவுரிமையையும் பறித்தெடுத்த ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரும் களங்கத்தை இலங்கையின் வரலாற்றில் ஏற்படுத்தி இருந்தது.இதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் நீங்கியதாக இல்லை.
1956 இல் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்கள சட்டமும் இம்மக்களின் மொழியுரிமைகளை பறித்தெடுத்தது.காலத்துக்கு காலம் இம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்கள் இச்சமூகத்தின் ஆணிவேரை அசைத்திருந்தன.பலர் மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கு பகுதிகளுக்கும் இந்தியாவிற்கும் இடம்பெயர்வதற்கும் இத்தகைய நிலைமைகள் உந்துசக்தியாகி இருந்தன.இதனால் சமூகத்தின் இருப்பு பல இடங்களில் கேள்விக்குறியானது.” இலங்கை நாடானது அதன் 75 சதவீத மக்களான சிங்களவர்களுக்கே சொந்தமானது.
சிறுபான்மையினர் இந்த நாட்டில் எங்களுடன் வாழலாம்.ஆனால் அவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் என்ற அடிப்படையில் சாத்தியமற்றதான எவற்றையும் கோரிக்கைகளாக முன்வைக்க முடியாது” என்ற இனவாதிகளின் சொல்லாடல்களுக்கு மத்தியில் மலையக சமூகத்தின் உரிமைகளும் தொடர்ச்சியாக மறுதலிக்கப்பட்டே வந்துள்ளன.
இதேவேளை இந்திய வம்சாவளி மக்களின் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில் இம்மக்களின் சனத்தொகை குறித்த புள்ளி விவரங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.இதில் திட்டமிட்ட மூடிமறைப்புகள் இடம்பெறுகின்றன என்ற சந்தேகம் மேலெழுகின்றது என்று கற்றறிவாளர்கள் சுட்டிக்காட்டி இருந்தமையும் இங்கு நோக்கத்தக்கதாகும்.ஒரு சமூகம் பல்வேறு சாதக விளைவுகளையும் பெற்றுக் கொள்வதற்கு அச்சமூகம்சார் சனத்தொகை முக்கிய இடம் வகிக்கின்றது.
இந்த நிலையில் இந்திய வம்சாவளியினர் தொடர்பாக முன்வைக்கப்படும் சனத்தொகை குறித்து ஐயப்பாடுகள் மேலோங்குகின்றன..2012 இல் இங்கிருந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்து 44,184 ஆகும்.இது நாட்டின் மொத்த சனத்தொகையில் 7.1 வீதமாக இருந்தது.
இந்நிலையில் அரசியலின் சகல மட்டங்களிலும் இம்மக்களின பிரதிநிதித்துவம் 7.1 வீ தம் என்பதனை வலியுறுத்த வேண்டும்.எனினும் இந்திய வம்சாவளியினர் பலர் தம்மை இலங்கை தமிழர் என்று பதிந்துகொண்டமை உள்ளிட்ட பல காரணங்களால் இம்மக்களின தொகை பின்வந்த காலத்தில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 4.1 வீதமாகியுள்ளது. இதனடிப்படையில் சுமார் ஆறு இலட்சத்து நான்காயிரத்து 680 இந்திய வம்சாவளியினர் தம்மை இலங்கைத் தமிழர்களாக பதிவு செய்துகொண்டுள்ளமையையும் தகவல்களின் ஊடாக அறிந்து கொள்ள முடிந்தது.
உரிமை மழுங்கடிப்பு
இந்திய வம்சாவளி மக்களை திட்டமிட்டு ஓரங்கட்டும் நிகழ்வினை இனவாதிகள் பட்டியல் அடிப்படையில் காலத்துக்கு காலம் நிறைவேற்றி வருவது ஒன்றும் புதிய விடயமல்ல.இதனால் இம்மக்களின சகல துறைகளும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலையில் உரிமை மழுங்கடிப்புக்களும் அதிகமாகவே இடம்பெறுகின்றன. இதில் வருந்தத்தக்கது என்னவென்றால் இச்சமூகத்தைச் சேர்ந்த பச்சோந்தி அரசியல்வாதிகள் சிலரும் இதற்கு உடந்தையாக இருப்பதேயாகும்.” வேலியே பயிரை மேய்கின்ற” இந்த நிலை கொடுமையிலும் கொடுமையாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.மலையக மக்கள் இந்நாட்டிற்கு வருகைதந்த காலம் முதல் அவர்களின் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் தொடர்பில் காலத்துக்கு காலம் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இன்றும் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.தோட்ட மக்களின் சமூக,பொருளாதார நிலைமை குறித்து 1992 ம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இவ்வாணைக்குழுவானது பல விடயங்களில் மலையக மக்கள் பின்தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தது. இதனடிப்படையில் குடியுரிமை, தொழிலாவாய்ப்புக்கள், கல்வி, தொழிற்பயிற்சி, வீட்டு வசதியும் சுகாதாரமும்,சமூகநலன் பேணல், மின்சார வசதி,தொடர்பாடல் வசதிகள், சமூக மற்றும் கலாசார மேம்பாடு, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றிற்கான வசதிகள், பிரதான தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் என்பவற்றில் இம்மக்கள் பின்னடைவினை வெளிப்படுத்தி இருந்தனர் என்பதனை ஆய்வு தெளிவாக வலியுறுத்தியது.
மலையக மக்கள் நாட்டின் முதுகெலும்பாகவும் ஒரு தனித்துவமான சமூகமாகவும் இருந்து வருகின்றனர்.தேசத்தின் அபிவிருத்தியில் இவர்களின் வகிபாகம் அதிகமாகும்.எனினும் இம்மக்கள் மீதான புறக்கணிப்பு வேதனை தருவதாகவுள்ளது.
வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பில் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்னும் தீர்ந்ததாக இல்லை.பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட லயன் அறைகளிலேயே இன்னும் பலர் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். “தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.200 வருடங்களை அண்மித்துள்ளபோதும் அவர்களுக்கு சொந்தமாக வீடும் இல்லை.மரணித்தால் அடக்கம் செய்வதற்கு மயானமும் இல்லை.
தோட்ட மக்களின் சம்பள பிரச்சினையும் இன்னும் அவ்வாறே இருந்து வருகின்றது.200 வருடகாலமாக அவர்கள் தோட்டங்களில் தொழில் செய்து வருகின்றபோதும் இன்னும் நாட்கூலிகளாகவே இருந்து வருவது கவலையளிக்கின்றது. மாதச் சம்பளம் அவர்களுக்கு இல்லாமை ஒரு குறைபாடாகும்” என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்தார்.
வறுமையின் உக்கிரம் மலையக மக்களை ஆட்டிப் படைக்கின்ற நிலையில் சகலதுறை பின்னடைவுகளுக்கும் இது வலுசேர்த்து வருவதும் புதிய விடயமல்ல. “வறுமையானது பல்பரிமாணங்களைக் கொண்ட ஒன்றாகும்.நிலைத்திருக்கூடிய வாழ்க்கைத் தரத்தினை உறுதிசெய்து கொள்வதற்கு போதுமான வருமானமும் உற்பத்தித்திறன் கொண்ட சாதனங்களும் இல்லாதிருத்தல், பசியும் போஷாக்கின்மையும் காணப்படுதல், கல்வியையும் வேறு அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாதநிலை காணப்படுதல், நோய்வாய்ப்படுதலும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும்,வீடின்மை அல்லது போதுமான இருப்பிட வசதியின்மை , பாதுகாப்பற்ற சூழல் காணப்படுதல் போன்றவற்றோடு சமூக ரீதியான பாரபட்சங்களுக்கு உள்ளாதல் அல்லது ஒதுக்கிவைக்கப்படுதல் என்பனவும் வறுமையை ஏற்படுத்தும் காரணிகளாகும் “என்று 1995 இல் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தவகையில் பெருந்தோட்ட மக்கள் இத்தகைய தாக்க விளைவுகள் பலவற்றையும் எதிர்கொள்ளும் நிலையில் அம்மக்களின் வறுமை அதிகரித்துள்ளதோடு இயல்பு வாழ்க்கையையும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
தேசியக் கொள்கை
மலையக மக்களின் அபிவிருத்தி கருதி கடந்தகாலத்தில் மூன்றாண்டு ,ஐந்தாண்டு, பத்தாண்டு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.எனினும் இவற்றின் ஊடாக உரிய சாதக விளைவுகள் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில் திட்டங்களின் ஊடான எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. இது ஒரு துரதிஷ்டமான நிலையேயாகும். இத்தகைய திட்டங்களுக்கு மென்மேலும் அழுத்தம் கொடுக்கப்படுவதோடு திட்டங்களின் வெற்றிக்கு மலையக கட்சிகளும், அரசியல்வாதிகளும் ஐக்கியத்துடன் ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியமாகும்.
எந்தகட்சி ஆட்சிபீடமேறினாலும் மலையக மக்களின் அபிவிருத்தி கருதி முன்வைக்கப்படும் பொதுவான திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பது இன்றியமையாததாகும்.
இங்கு கட்சி அரசியல், சுய இலாபங்களுக்கு அப்பால் மக்களின் தேவைகளை முன்னிறுத்தி செயற்படுதல் வேண்டும்.இது சாதக விளைவுகள் பலவற்றுக்கும் அடித்தளமாகும்.இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்த ஒரு கருத்து முக்கியமானதாக காணப்படுகின்றது.” நாம் அனைவரும் ஒரு தேசிய கொள்கையுடன் செயற்பட வேண்டும். நாம் அன்றாடம் வாத பிரதிவாதங்களை மேற்கொண்டபோதும் தேசிய கொள்கை என்பது ஒன்றாக இருக்க வேண்டும்.10,15,20 வருடங்களுக்கு என்று இதனை வகுத்துக் கொள்ள வேண்டும்.
தேசியக் கொள்கையுடன் முன்செல்லுவோமாக இருந்தால் நாம் தோல்வியடைய மாட்டோம்.அரசாங்கத்துக்கு அரசாங்கம் கொள்கைகளை மாற்றினோம். அமைச்சர்கள் மாறும் போதும் கொள்கைகள் மாற்றமடைந்தன.
பிறகு எவ்வாறு நாட்டில் அபிவிருத்தி ஏற்படும்? இருப்பதை முற்றாக அழித்து புதியதை உருவாக்க முனைவது பிழையானதாகும் ” என்றார் அவர்.