இனங்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு நல்லிணக்கத்தை பாதித்ததாக கூறுகிறார் பிரதமர்!

கடந்த காலங்களில் இனங்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு நல்லிணக்கத்தை பாதித்ததாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், வேலணை பகுதியில் நேற்று (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்துரைத்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘கடந்த காலங்களில் எங்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறைகளினால் இனங்களுக்கு இடையே முரண்பாடு உருவாகின’.

‘அது நல்லிணக்கத்தை பாதித்தது’ என்று பிரதமர் கூறியுள்ளார். ‘அந்த முரண்பாடுகள் அனைத்தும் தற்போது ஒழிக்கப்பட்டுள்ளதுடன் அனைவரும் உடன்பாடுகளுடன் நல்லிணக்கத்தை நோக்கி செல்லும் திசையில் பயணத்தை ஆரம்பித்துள்ளோம்’. ‘சுதந்திரத்துக்கு பின்னர் இந்த நாட்டில் பலர் இரத்தம் சிந்தியது போதும். தாய்மார் தங்களின் பிள்ளைகளை இழந்து அழுதது போதும்’.  ‘அந்த வேதனையில் இருந்து மீண்டெழுவதற்காக அதனை சரிசெய்ய வேண்டிய சூழல் எமக்கு தேவைப்படுகிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘அதனூடாக நல்லிணக்கம், நீதி மற்றும் நேர்மையான சூழலை உருவாக்க வேண்டும்’.
பல்வேறு இனங்கள் சேர்ந்து வாழக் கூடிய நாடாகவே எமது நாடு உள்ளதென்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.