தங்களது கொள்கை பிரகடனத்துக்கு அமைய பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதில் பங்கேற்று கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் அன்றாட பணிகளை முன்கொண்டு செல்வதில் எந்த அச்சுறுத்தலும் இல்லை.
இதுவரையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற போர்வையில் இனவாதமும் அடிப்படைவாதமுமே காணப்பட்டது. எனவே நாட்டில் மீண்டும் இனவாதத்தையும் அடிப்படை வாதத்தையும் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் கருத்துரைக்கப்படுகிறது. அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகவும் உள்ளது. எனினும் நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற திட்டமிட்ட குற்றக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான தனியானதொரு சட்டம் இல்லை. இருப்பினும் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக புதியதொரு சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். எனவே, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று அது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே நாங்கள் கூறியுள்ளோம். இதன்படி, திட்டமிட்ட குழுக்களை கட்டுப்படுத்துவதற்காக புதியதொரு சட்டத்தை உருவாக்கி அதனூடாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இது பல தசாப்தங்களாக மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தரப்பினரை கட்டுப்பவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ‘2030ஆம் ஆண்டளவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்’ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ‘இராணுவத்தினரின் எண்ணிக்கை ஒரு லட்சமாகவும், கடற்படை எண்ணிக்கை 40 ஆயிரமாகவும், விமானப் படை எண்ணிக்கை 18 ஆயிரமாகவும் குறைக்கப்படும்’ என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



