அரசு கொண்டு வந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை காப்பாற்றக்கூடிய இச்சட்டமானது ஒட்டு மொத்தமாக இலங்கை வாழ் மக்களுக்கு பொறுத்தமற்றது.பயங்கரவாத தடைச் சட்டத்தை எவ்வாறு நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோமோ, அதே போன்றுதான் இச் சட்டமும் எந்த திருத்தமும் இன்றி நீக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின், மன்னார் நேசக்கரம் பிரஜைகள் குழுவின் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை (28) மதியம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் அரசு கொண்டு வந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை காப்பாற்றக்கூடிய சட்டமானது கடந்த காலங்களில் உள்ள அரசு கொண்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி விட்டு அதற்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டமாக இதை கூறினாலும்,எதிர் வரும் மாதங்களில் குறித்த சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்ற உள்ளனர்.
இச்சட்டமானது ஒட்டு மொத்தமாக இலங்கை வாழ் மக்களுக்கு பொறுத்தமற்றது.பயங்கரவாத தடைச் சட்டத்தை எவ்வாறு நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோமோ,அதே போன்றுதான் இச் சட்டமும் எத்திருத்தமும் இன்றி நீக்கப்பட வேண்டும்.
இச்சட்டம் கொண்டு வரப்பட கூடாது என்ற கருத்தையும் நாங்கள் முன் வைக்கின்றோம்.குறித்த விடயம் தொடர்பாக சிவில் சமூகம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,தெளிவாக குறித்த சட்டத்திற்கு எதிராக தமது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மீனவர் சமூகம் சார்ந்த நாங்களும் குறித்த விடையம் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்கிறோம்.போராட்டங்கள் ஊடாகவும்,ஊடகங்கள் ஊடாகவும் நாங்கள் பல்வேறு விடையங்களை இந்த அரசுக்கு தெரிவித்து வருகிறோம்.
கதைப்பதற்கான உரிமையை கூட புதிதாக கொண்டு வரப்படவுள்ள சட்டத்தின் பிரிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே அரசு இச்சட்டத்தை மீளப்பெற்று,முன்பு இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தையும் இல்லாது செய்து, நாட்டிற்கு தேவையான பொதுவான பல சட்டங்கள் இருக்கிறது.அந்த சட்டத்தின் ஊடாக செயல்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.
எனவே கொண்டு வரப்படவுள்ள சட்டமானது சாதாரணமாக விவசாயிகள் மீனவர்கள் உள்ளடங்களாக பலருக்கு சுமையை ஏற்படுத்த உள்ளது.பயங்கரவாத தடைச்சட்டம் கூட பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.எனினும் நீதிமன்றம் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடிய வகையில் அமைந்திருந்தது.
ஆனால் புதிதாக கொண்டு வரப்படவுள்ள சட்டமானது ஜனாதிபதி,ஜனாதிபதியின் செயலாளர்,பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றிற்கு மாத்திரமே முழுமையான அதிகாரத்தை வழங்குகிறது.
போராட்டம் மற்றும் கருத்து கூறுதல் என்பது ஜனநாயக உரிமை.அந்த உரிமையை இல்லாது செய்கிற இந்த சட்டம் தேவையற்றது. அச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றார்.



