கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக மற்றுமொரு புதிய பெயரை ஜனாதிபதி பரிந்துரை!

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை தொடர்ச்சியாக நிராகரித்து வரும் நிலையில், மற்றுமொரு புதிய பெயரை ஜனாதிபதி விரைவில் பரிந்துரைக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி ஆனந்த விஜேபால ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், “நாட்டுக்கு ஒரு கணக்காய்வாளர் நாயகம் அவசியம் என்பதை ஜனாதிபதி அறிந்துள்ளார்.
முன்னைய பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியான வேறொருவரின் பெயர் வரும் நாட்களில் முன்வைக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கணக்காய்வு அலுவலகம் கடந்த 7ஆம் திகதி முதல் கணக்காய்வாளர் நாயகம் அல்லது பதில் கணக்காய்வாளர் நாயகம் இன்றி இயங்கி வருகின்றது. இதற்கு முன்னர் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட எச்.டி.பி. சந்தன, எல்.எஸ்.ஐ. ஜயரத்ன மற்றும் இராணுவத்தின் உள்வாரி கணக்காய்வு பணிப்பாளர் ஓ.ஆர்.ராஜசிங்க ஆகியோரின் பெயர்கள் அரசியலமைப்பு பேரவையினால் நிராகரிக்கப்பட்டன.

இறுதியாக ஓ.ஆர்.ராஜசிங்கவின் பெயர் பரிசீலனைக்கு வந்தபோது, அரசியலமைப்பு பேரவையில் அதற்கு ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டன.  இந்தநிலையில் ஜனாதிபதியின் பரிந்துரைகள் காரணமின்றி நிராகரிக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கவலை வெளியிட்டுள்ளார்.

“ஜனாதிபதி தகுதியானவர்களையே பரிந்துரைக்கிறார். ஆனால் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் எவ்வித விளக்கமும் இன்றி அவற்றை எதிர்க்கின்றனர்” என அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக இருப்பதால், பொது நிதி மேற்பார்வை மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவும் எச்சரித்துள்ளனர்.