பேரிடர் தயார்படுத்தலில் குறைபாடு இருப்பதை ஒப்புக் கொண்டார் ஜனாதிபதி!

நாட்டின் பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் நீண்டகால குறைபாடுகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த குறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், உயிரிழப்புகள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குதல், உட்கட்டமைப்பு சேதம் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் உடனடியாகவே செயற்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இருந்தாலும், நிலப்பயன்பாட்டு ஒழுங்குவிதிகள், உள்ளூர் தயாரிப்புகள், மீட்பு உதவிகளின் வேகம் போன்ற துறைகளில் பலவீனங்கள் வெளிப்பட்டன என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.  அரசாங்கம், தற்போது பேரிடர் முகாமைத்துவ அமைப்பை முழுமையாக மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக, அதிக அதிகாரமும் வளங்களும் கொண்ட தேசிய பேரிடர் முகாமைத்துவ அதிகாரசபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், முன்கூட்டிய கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்புகளை, குறிப்பாக காலநிலை கண்காணிப்பு மற்றும் சமூக எச்சரிக்கை முறைகளை மேம்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ரேடார் வசதிகளை மேம்படுத்தல், ஆபத்தான பகுதிகளில் மீட்பு உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே கையிருப்பில் வைத்திருத்தல், மலைப்பாங்கான பிரதேசங்களில் மண்சரிவு அபாய வரைபடங்களைப் புதுப்பித்தல் போன்ற கட்டமைப்பு சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், நீண்டகால நிலைத்தன்மையைக் கட்டியெழுப்ப அரசாங்கம் முழு உறுதியுடன் செயல்படும் என்றும் இலங்கை மேலும் சிறப்பாக மீள கட்டியெழுப்படும் என்றும் ஜனாதிபதி இந்திய ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.