சர்ச்சைக்குரிய சீன ஆய்வு கப்பலின் பிரசன்னம் இந்து சமுத்திரத்தில்…

இலங்கைக்கு வருகை தந்த சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வு கப்பலான, யுவான் வாங் 5 (Yuan Wang 5), சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்து சமுத்திர கடற்பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பிராந்திய கண்காணிப்பினை தீவிரப்படுத்திவரும் நிலையில், இந்த கப்பல் மீண்டும் தோன்றியுள்ளது.
சீன மக்கள் விடுதலைப் படை கடற்படையால் இயக்கப்படும் அதிநவீன செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 5, கடந்த 18ஆம் ஆம் திகதியன்று இந்தோனேசியாவிற்கு அருகே இறுதியாக அவதானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 முதல் 25ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு ஹைப்பர்சோனிக் நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் வங்காள விரிகுடாவின் வான்வெளியைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விமானப்படையினருக்கான அறிவிப்பொன்றையும் இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் சீனாவின் குறித்த சர்ச்சைக்குரிய ஆய்வு கப்பல் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது. யுவான் வாங் 5, கப்பலானது விமானம் அல்லது விண்வெளிசுற்றுப்பாதையில் உள்ள பொருட்களைக் கண்காணிக்கும் திறன் கொண்ட மேம்பட்ட ரேடார் அமைப்புகளைக் கொண்டுள்ளதுடன், 400க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது.

இதன் இரட்டைப் பயன்பாட்டு கண்காணிப்புத் திறன்கள் இந்தியாவில் கவலைகளை எழுப்பியுள்ளதுடன், இந்திய அதிகாரிகள் சாத்தியமான கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையாக உள்ளனர்.
கப்பல் அதன் வழிசெலுத்தல், பாதுகாப்பு மற்றும் விசேட உபகரணங்களை மேம்படுத்த 2022ஆம்ஆண்டு தொழில்நுட்ப மேம்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு கவலைகள் இருந்தபோதிலும் இலங்கை அனுமதி வழங்கிய பின்னர், இந்தக் கப்பல் முன்னதாக 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
இந்தத் துறைமுகம் 2016ஆம் ஆண்டு முதல் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.