நாட்டை பிரிக்காமல் தமிழ்த் தேசியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு காலகட்டங்களிலும் தாம் போராடி வந்ததாகவும், ஒவ்வொரு கட்டத்திலும் தங்களது முயற்சி தோல்வியடைந்தே செல்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
1977ஆம் ஆண்டு காலம் வரையும் தங்களது முயற்சி இவ்வாறானதாகவே காணப்பட்டதாகவும், தொடர்ந்தும் இனப்படுகொலைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாகவே நாட்டை பிரித்தேனும் தமிழ்த் தேசியத்தை பாதுகாக்க வேண்டிய நிலை உருவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தனித் தமிழ் ஈழத்துக்கு மாற்றீடாக தமிழ்த் தேசியத்தின் பாதுகாப்புக்கான அனைத்து முயற்சிகளும் திம்பு கோட்பாடுகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ராஜபக்ச அரசாங்க காலத்தில் பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், நாட்டில் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்ட போதிலும், அதனைச் சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் உள்நாட்டுப் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக அரசாங்கம் கூறியதை குறிப்பாக மேற்கத்திய நாடுகளும், இந்தியாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் அதே நிலைப்பாடே தொடர்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



