‘டித்வா’ புயல் பாதிப்பு: நுவரெலியாவில் 23 குடும்பங்கள் தற்போதும் வீடுகளின்றித் தவிப்பு!

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் ரேந்தபொல – ஹக்கலை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இடம்பெயர்ந்த 23 குடும்பங்கள், இன்றும் அடிப்படை வசதிகளின்றித் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு பல மாதங்கள் கடந்த போதிலும், தமக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படாமை குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் வசித்து வரும் தற்காலிக கூடாரங்கள் நுவரெலியாவின் கடும் குளிர் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மையற்றவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் கூடாரங்களுக்குள் நீர் கசிவதாலும், மின்சார வசதி இல்லாமையினாலும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  அதோடு  சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமது வீடுகளைப் புனரமைக்க அல்லது நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.