சுட்டுக்கொல்லப்பட்ட தவிசாளர், பாதாளக்குழுவுடன் தொடர்புள்ளவர்: அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த வெலிகம பிரதேசசபைத் தலைவர், பாதாளக்குழுவுடன் தொடர்புபட்டவர். பாதாளக் குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேச சபைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இந்த நாட்டில் பாதாளக் குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள் பிளவுபட்டுக் காணப்படுகின்றன. அவற்றுக்கிடையில் மோதல் உள்ளது. ஆயுதங்களும் உள்ளன.  நேற்று இடம்பெற்ற சம்பவமும் பாதாளக்குழுவுடன் தொடர்புபட்டதாகும். அவர் மக்கள் பிரதிநிதி என்ற போதும் பாதாளக்குழுவுடன் தொடர்புபட்டவர். அவருக்கு எதிராக ஆறு வழக்குகள் உள்ளன. சிறைத் தண்டனையைக்கூட எதிர்கொண்டவர். இவர் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. கொலைகளை நாம் அனுமதிப்பதில்லை. இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகிறது- என்றார்.