தியாகதீபம் திலீபனின் ஊர்திக்கு முன்பாக பட்டாசு கொளுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்றுள்ளது. தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, தாயகத்தில் ஊர்திப்பவனி இடம்பெற்று வருகின்றது.
இந்தப் பவனி நேற்று பருத்தித்துறையைச் சென்றடைந்தது. இதன்போது பருத்தித்துறை நகர முதல்வர் வின்சன் டி போல் டக்ளஸ் போல், வர்த்தகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் உணர்வுபூர்வமாக மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்த ஊர்தி, பருத்தித்துறை நகர சுற்று வட்ட வீதியூடாகப் பயணித்து நவீன சந்தை கட்டடத் தொகுதிக்கு முன்பாக நிறுத்த முற்பட்டபோது அங்கிருந்த ஒருவர் பட்டாசுகளைக் கொளுத்தி ஊர்திக்கு முன்பாக வீசியுள்ளார். இதன்போது, பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தனது பாதணியால் பட்டாசுக் கோர்வையை மிதித்து, அதைத் தொடர்ந்து வெடிக்காமல் பார்த்துக் கொண்டதுடன், இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் அந்த நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மதுபோதையில் இருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட் டன.