ராஜபக்சவினர் கொள்ளையடித்தது போன்று எதிரணியினரும் கொள்ளையடித்திருக்கிறார்கள்-அருட்தந்தை மா.சத்திவேல்

181 Views

இலங்கையின் சொத்துக்களை ராஜபக்சவினர் கொள்ளையடித்தது போன்று எதிரணியில் இருக்கின்றவர்களும் தங்களது ஆட்சி காலத்தில் கொள்ளையடித்தும் சூறையாடியும் உள்ளனர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (08) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காலி முகத்திடல் கோத்தா கோகம போராட்டத்தின் மூன்றாம் மாத நிறைவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பிராந்திய ரீதியிலான போராட்ட அமைப்பினர் கொழும்பை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அதன் ஓர் அங்கமாக பௌத்த பிக்குகளில் ஒரு தொகுதியினர் சிங்கள பௌத்த முகத்தோடு பல் சமய முகமூடியோடு சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி விட்டனர். இதன் முடிவில் வெற்றி இளைஞர்களுக்கா? சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கா? நிகழப்போவது இன்னும் ஒரு அரசியல் சங்கீத கதிரை காட்சி அரசியல் நிகழ்வாகவும் அமையலாம். தமிழர்களை பொறுத்த வரையில் பாராளுமன்ற ஆட்சியின் கீழும், நிறைவேற்ற அதிகாரம் கொண்ட 42 வருட கால ஜனாதிபதி ஆட்சியின் கீழும் கிடைத்தது ஒன்றுமில்லை.

நாட்டில் நிகழ்ந்துள்ள பொருளாதார நிலைமைக்கு ராஜபக்சக்கள் மட்டும் காரணம் அல்ல. சுதந்திர இலங்கையில் ஆட்சியில் அமர்ந்தவர்களும் எதிர் அணியில் இருந்தவர்களும் மட்டுமல்ல அமைச்சுக்களை கட்சிகளின் கொட்டகைகளாக்கி பொறுப்புக்களை வகித்தவர்களும், கட்சித் தலைவர்களால் தமக்கு கொடி பிடித்து ஆதரவு தெரிவித்தவர்களை அரசுப் பணிகளில் அமர்த்தி மகிழ்ந்தவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

ராஜபக்சவினரும் அவர்களின் கூட்டாளிகளும் ஆட்சி கதிரையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்கான செயற்பாட்டில் இறங்கும் எதிர்கட்சியினர் தாம் குற்றமற்றவர்கள் எனக் கூறுவதற்கோ அதற்கு நியாயம் கற்பிப்பதற்கோ எந்த வகையிலும் தகுதியானவர்கள் அல்ல. தற்போதைய நிலைக்கு அனைவரும் கூட்டு பொறுப்பேற்க வேண்டும்.

நாட்டின் சொத்துக்களை ராஜபக்சவினர் கொள்ளையடித்தது போன்று எதிரணியில் இருக்கின்றவர்களும் தங்களது ஆட்சி காலத்தில் கொள்ளையடித்தும் சூறையாடியும் உள்ளனர்.

அதுமட்டுமல்ல கடந்த காலத்தில் ராஜபக்ச “பலருடைய கோவைகள் என்னிடம் இருக்கின்றன”என பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். அண்மையில் அனுரகுமார திசாநாயக்கவும் ராஜபக்சக்களின் கோவைகளையும் இன்னும் பல கோவைகளையும் ஊடகங்களில் காட்டிக் கொண்டிருந்தார். அரசியல் குற்றவாளிகள், பொருளாதார கொலையாளிகள் என்போரை பாதுகாக்கும் ஒரு இடமாகவே நாடாளுமன்றம் செயல்பட்டு வருகின்றது என்பது மக்களின் குற்றச்சாட்டு.

இதற்கு மத்தியில் தான் ராஜபக்சவினரை முற்றிலும் அகற்றிய சர்வ கட்சி அரசு உருவாக்க வேண்டும் எனும் கருத்து முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான ஒன்றுக்கே தற்போதைய போராட்டம். ஆனால் அது நிறைவான ஒன்றல்ல.

நாட்டில் கடந்த 74 ஆண்டு காலமாக சிங்கள பௌத்த பேரின வாத சிந்தனையாளர்களால், அரசியல் கட்சிகளால் பதவி மோகம் கொண்டு நிகழ்த்தப்பட்ட அரசியல் கருத்தியல் கொலைகளும், அபிவிருத்தி கொலையும், பொருளாதார கொலையும், தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட போரியல் ரீதியிலான கொலையுமே தற்போது நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளதோடு உலக நாடுகளிடம் கையேந்தவும் வைத்துள்ளது. நாட்டின் அடிமட்ட மக்கள் அன்றாடம் வீதியிலே வரிசையிலே நிற்கின்றனர். பலர் மரிக்கின்றனர். இதற்கு சிங்கள பௌத்த பேரினவாதம் பொறுப்பேற்க வேண்டும்.

தற்போது நாட்டுக்கு தேவை பொருளாதார அபிவிருத்தி ரீதியிலான நீதி மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கின்ற கொடுமைகளுக்கான நீதி கட்டமைப்புகளும் உருவாக்கப்படல் வேண்டும். அதிலே தான் நாட்டினுடைய எதிர்காலம் தங்கி இருக்கின்றது.

ஆனால் தற்போதைய போராட்டம் அதற்கான சூழலை உருவாக்கவில்லை. வெறுமனே ஆட்சிக் கதிரையில் மாற்றத்தை நோக்கிய செயற்பாடாகவே உள்ளது. இவ்வாறான செயற்பாடு வெற்றிகளை தந்தாலும் நீண்ட கால மக்கள் நலனுக்கோ, அனைத்து இனத்தவரின் அரசியல் எதிர்காலத்திற்கோ அது உகந்ததாக அமையாது.

காலிமுகத்திடல் போராட்டம் நபர்களை அகற்றுவதில், துரத்துவதில் தங்கி இருக்குமாயின் அது தோல்வி என்று உணர வேண்டும். நாட்டின் நலன் கருதும் வடகிழக்கு மக்களையும் உள்ளடக்கிய அரசியல் இதய சுத்தியுள்ளவர்களை உள்ளடக்கியவர்களால் முன்வைக்கப்படும் இனங்களின் அடையாளமும், தனித்துவம், பாதுகாக்கப்படும் மைய அரசியல் நீரோட்டத்தை உருவாக்குவதற்கான அரசில் செயற்பாட்டு திட்டமே நாட்டின் அனைத்து மக்களின் வெற்றியை உறுதி செய்யும்.

ஆனால் தற்போதைய போராட்டத்தின் முகம் அத்தகையாய் இல்லை என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகும். தற்போதைய தேவை கோட்டா கோ கம என்பதல்ல. இனவாத, மதவாத கருத்தியல் கொண்டவர்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்பதாகும். இக் கோசம் எழும் நாளே நாட்டின் வெற்றி நாளாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply