அகதிகளை கண்காணிப்பதற்கான மலேசிய அரசின் புதிய முறை: அச்சத்தில் ஆயிரக்கணக்கான அகதிகள் 

125 Views

ஐ.நா.விடம் பதிந்துள்ள 184,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மலேசியாவில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர்.  இந்த அகதிகளை கண்காணிப்பதற்கான புதிய முறையை மலேசிய அரசு உருவாக்கியுள்ளது. 

Tracking Refugees Information System (TRIS)  எனும் அகதிகளை கண்காணிக்கும் முறைமையினை பயன்படுத்துவதை மலேசிய அரசு அங்கீகரித்துள்ளது என மலேசிய உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் அறிவித்திருக்கிறார்.

அத்துடன் இந்த முறைமையின் கீழ் மலேசியாவில் உள்ள அனைத்து அகதிகளும் பதிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார். இந்த முறைமையின் மூலம் அகதிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை மலேசிய அரசு அறிந்து கொள்ள முடியும்.

TRISயின் இணையத்தளத்தில், “நாட்டில் உயர்ந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை மலேசிய அரசாங்கத்தின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது,” எனக் கூறப்பட்டுள்ளது.

மியான்மர், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து போர் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறிய ஆயிரக்கணக்கான அகதிகள் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில், மலேசிய அரசின் இந்த செயல் அகதிகளுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

Barisan Mahamega Sdn Bhd எனும் தனியார் நிறுவனம் இந்த தகவல் முறைமையை செயல்படுத்த இருக்கிறது.

மலேசியாவில் உள்ள சின் அகதிகளின் கூட்டணி இந்த கண்காணிப்பு முறைமையைக் கண்டித்துள்ளது.  இக்கூட்டணி மியான்மரிலிருந்து வெளியேறி மலேசியாவில் வசிக்கும் 23,000 க்கும் மேற்பட்ட சின் இன மக்களுக்கான ஒரு சமூகக் குழுவாகும். இந்த முறைமையின் கீழ் சேகரிக்கப்படும் தகவல்கள் அகதிகளின் சம்மதமின்றி மலேசிய அரசுக்கு பகிரப்படும் எனக் கூறுகிறார் சின் அகதிகள் கூட்டணியின் பிரதிநிதியான ஜேம்ஸ் பவி தங் பிக்.

“அகதிகளை மலேசிய சமூகத்திற்கு அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள் என்றால், அகதிகளால் செய்யப்படாத குற்றங்களை எப்படி பார்க்கிறார்கள்?” என சின் அகதிகள் கூட்டணியின் பிரதிநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply