மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட மசாலாப் பொருட்களின் மதிப்பை அதிகரித்து அவற்றை மறு ஏற்றுமதி செய்ய வாய்ப்பளித்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த முடிவின் காரணமாக இலங்கை மசாலாப் பொருட்களின் உலகளாவிய நற்பெயர் பாதிக்கப்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்தத் தீர்மானத்தால் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் மசாலாப் பொருட்களின் கொள்கலன்களில் கடுமையான தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
அத்துடன், குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் சந்தையை ஆக்கிரமித்தால், உள்ளூர் உயர்தர மசாலாப் பொருட்களுக்கான தேவை குறையும்.
அரசாங்கம் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனில், உள்ளூர் மசாலாப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் சங்கம் கூறியுள்ளது.