தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை சிங்கள அரசு தான் தீர்மானிக்கின்றது

281 Views

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலை இங்கு தருகின்றோம்.

கேள்வி:-

13ஆம் திருத்தச் சட்டத்தின் இன்றைய நிலை மற்றும் அதன் சாதக பாதகம் குறித்து உங்கள் கருத்து ?

பதில்:

13ஆம் திருத்தச் சட்டத்தின் ஆரம்பம் என்பது 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது ஆரம்பிக்கப்பட்டது. தனிநாட்டுக் கோரிக்கை, அரசியல் தீர்வு, சமஸ்டி, என்று பேசும் போது, ஒரு காலகட்டத்தில் அதிகாரப்பகிர்வு என்று பேசப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக நிர்வாகம், அதிகாரப்பகிர்வு மூலம் அரசியல் பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தலாம் என நம்பி, இந்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொண்ட ஒரு ஆலோசனை தான் 13ஆவது திருத்தச் சட்டம். தனிநாட்டுக் கோரிக்கையை இந்தியா ஆதரிக்காத போது, இந்த சட்டம் மூலம் குறைந்தபட்ச தீர்வையாவது அளிக்கலாம் என இந்தியா கருதியது.

இதை சட்ட ரீதியாகவும், அரசியல் சாசன ரீதியாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து வடக்கு கிழக்கு மற்றும் தமிழக தமிழ் மக்களும் கருதியதுடன். இதன் மூலமாக அதிகாரப் பரவலாக்கல் தீர்வை எட்ட முடியும் எனவும் கருதினர்.

ஆனால் இலங்கை அரசாங்கம் 1987இலிருந்து கடந்த 30 வருடங்களாக 13ஆவது திருத்தச் சட்டத்தை எழுத்து மூலமாக, ஒப்பந்த ரீதியாக ஏற்றுக் கொண்ட போதிலும்கூட, அதை நிறைவேற்றுவதற்குரிய கடமை உணர்ச்சியோ காணப்படவில்லை. அத்துடன் இத் திருத்தச் சட்டத்தை முன்னெடுத்தால், இதன் மூலம் இனப்பிரச்சினைக்கோ, தனிநாட்டுக் கோரிக்கைக்கோ தீர்வு காணலாம் என்ற எண்ணம் இல்லை.

இலங்கை ஒற்றைக் கலாச்சார, பண்பாட்டைக் கொண்ட நாடாக இருப்பதால், சிங்கள மக்கள் இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை தனிநாட்டிற்கான ஒரு முதல் படியாகவே பார்க்கிறார்கள். சமஸ்டி என்பதைக்கூட அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை.

இதனால் தான் கடந்த 30 ஆண்டு காலமாக இந்தியாவும் இதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்தும்கூட அது தொடர்பாக எந்தவொரு முன்னெடுப்பும், விருப்பமும் இல்லாததால் தான் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

2009 போருக்குப் பின் 13ஆம் திருத்தத்தைக் கொண்டு வந்து ஒரு அதிகாரப் பகிர்வை நோக்கி நகர்வோம் என இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. இந்த கூற்றில்கூட அவர்களுக்கு ஒரு ஈடுபாடு இருக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் பன்னாட்டு ரீதியிலான இனப்படுகொலை, போர்க் குற்ற விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகள் இருந்த போதும்கூட இலங்கை அரசாங்கம் இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏதோவொரு உரையாடலுக்காக பயன்படுத்தி வந்தார்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்த 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி இந்தியாவுடன் உரையாடலுக்காகவே பயன்படுத்தி வந்துள்ளனர். இதேநேரம் தமிழ் மக்களுக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை வழங்காததும் இலங்கை அரசின் இரட்டை வேடத் தன்மையைக் காட்டுகின்றது.

தற்போது சில காலங்களாக இலங்கை அரசாங்கம் 13ஆம் திருத்தச் சட்டத்திலிருந்து விலகிச் செல்வதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு சிங்கள மக்கள் முடிவெடுக்க வேண்டும் என்று அரசாங்கம் சொல்வதிலிருந்து, சிங்கள அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு எடுக்காது என்று நாம் சொல்ல வேண்டும்.

அத்துடன் இலங்கைக்கு இருக்கும் பொருளாதார, அரசியல் பிரச்சினைகள், சீனாவுடனான ஒரு நெருக்கமான உறவுகளை வைத்து பார்க்கும் போது சீனாவுடன் இராணுவ, புவிசார், அரசியல் தளத்திற்கு நகர்ந்த பிறகு, இந்தியாவுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புகளை பேணுவதற்கு இந்த 13ஆவது திருத்தச் சட்டம் உதவும் என இலங்கை அரசு நம்புவதால், அந்த துருப்புச் சீட்டை வீசியெறியவில்லை. இந்திய அரசு இதை மீண்டும் பேசினாலும்கூட சிங்கள அரசோ, அரசியல் சாசனமோ, சிங்கள மக்களோ இவற்றை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

ஆதலால் தான் தமிழ் மக்களின் அரசியல் உரையாடலுக்கும், வேண்டுதலுக்கும் அமைய 13ஆவது திருத்தச் சட்டத்தையும் கடந்து நாம் ஏதாவது ஒரு நிலைப்பாட்டை உறுதியாக முன்னெடுத்து உரைக்க முயல வேண்டும். மொழி, இனம், கலாச்சாரம், நிலம் போன்றவற்றை அடக்கிய ஒரு அதிகாரப் பகிர்வை வைத்து நாம் நகர வேண்டும். இதை இலங்கை அரசாங்கம் கூறுவது போல 13+ என்பதால் நமக்கு ஏதாவது நன்மை உள்ளதா என்று பார்க்க வேண்டும். இதை ஒரு துருப்புச் சீட்டாக இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருக்குமா? இந்திய அரசாங்கம் உரையாடலுக்காக இதை நகர்த்திக் கொண்டிருக்குமா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

13ஆம் திருத்தச் சட்டத்தை நாங்கள் நிர்வாக ரீதியாகப் பார்க்கின்றோம். ஆனால் இலங்கையில், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நிலப்பரப்பு தொடர்பாக ஒரு வரையறைக்கு உட்படுத்த வேண்டும். அங்கு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தவும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவும் பெரும் முயற்சியை 30, 40 வருடங்களாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அடுத்த பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை விகிதாசாரத்தை இலங்கை அரசு முழுமையாக கொண்டு வந்த பின்னர், இலங்கை அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை மட்டுமல்ல, அதைக் கடந்தும் அவர்களால் பேச முடியும். அதிகாரப் பகிர்வை அவர்கள் செய்யப் போவதில்லை. இதற்கான அடித்தளங்களை அவர்களால் உருவாக்க முடியும்.

சிங்களக் குடியேற்றங்கள் கிழக்கில் மட்டுமல்லாது, வடக்கிலும் முல்லைத்தீவிலும் பெருமளவில் கொண்டிருக்கின்றன. இதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இந்தப் பகுதிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கும் போது, இராணுவம் இங்கிருந்து 20 ஆண்டுகளாக விலகாத போது நமக்கான தீர்வு எவ்வாறு கிடைக்கும்.

அத்துடன் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை சிங்களவன் தான் தீர்மானிக்கின்றான். அங்கு ஒரு பொருளாதார வளர்ச்சிக்கோ, வாழ்வாதாரங்களைப் பற்றியோ ஒரு உயர் நிலையை ஏற்படுத்துவதற்கு பொருளாதார அதிகாரங்கள் மக்களுக்கு வேண்டும். சமூக கட்டுப்பாடுகளை ஏற்படுத்த இராணுவம் அங்கிருந்து விலக வேண்டும். சமூகக் கட்டுப்பாடு என்று சொல்லும் போது, ஒரு சமூகம் இயல்பாக இயங்க வேண்டுமானால், அந்தப் நிலப்பரப்பில் இராணுவம், காவல்துறை போன்றவை நிலை கொள்ளுமாக இருந்தால். சமூக சூழல் அங்கிருக்க வாய்ப்புக் கிடையாது. எனவே இராணுவத்தினர் அங்கிருந்து விலக வேண்டும்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் குடியேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இரண்டு பிரதேசங்களிலும் இராணுவத்தினர், சிங்களக் குடியேற்றங்கள் ஒரு குறிப்பிட்டளவு பிரதேசத்தில் இருக்கும் போது. அவற்றை விலக்கக் கோர வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தை கோருவதாக இருந்தாலும் சரி அல்லது அதற்கு அப்பால் கோருவதாக இருந்தாலும் சரி அதில் ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும்.

-இராமு மணிவண்ணன்-

Leave a Reply