உறக்கத்தைக் கலைத்த ‘The Lamp of Truth’ – ‘பொய்யா விளக்கு’ திரைப்படம்

WhatsApp Image 2021 07 11 at 2.57.05 PM உறக்கத்தைக் கலைத்த 'The Lamp of Truth' - 'பொய்யா விளக்கு' திரைப்படம்

இலங்கை ஈழ மண்ணில் இறுதி யுத்த நாட்களில் நடைபெற்றவை போர்க் குற்றங்களே என வலுவான ஆதாரமாக இருப்பவைகளில் மிக முக்கியமானது சேனல் 4 வெளியிட்ட காணொளிக் காட்சிகள், பிறகு நேரில் கண்ட சாட்சியங்கள்.

பொதுவாக, ஹேக் ஒப்பந்தம், ஜெனிவா ஒப்பந்தம், ரோம் சட்டம் ஆகியவற்றின்படி இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் என்று, என்னென்ன குற்றச் செயல்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றனவோ, அவற்றை விடப் பல மடங்கு குற்றங்கள் ஈழ மண்ணின்  இறுதி யுத்தக் காலங்களில் இலங்கை இராணுவம் மற்றும் அரசாங்கத்தால் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன.

அவற்றுள் மிக முக்கியமானது, இறுதி நேரத்தில் அரசு மருத்துவர்களை அங்கிருந்து வெளியேறச் சொன்னது. பொது மக்களின் கூடாரங்கள், பதுங்கு குழிகள் மீதெல்லாம் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடக்கும் அப்பாவி மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கக் கூடாது என்பதற்காக இலங்கை அரசு இவ்வாறு உத்தரவிட்டது.

WhatsApp Image 2021 07 11 at 2.57.05 PM உறக்கத்தைக் கலைத்த 'The Lamp of Truth' - 'பொய்யா விளக்கு' திரைப்படம்

“எங்க மக்களுக்கு இந்த நேரத்தில் மருத்துவ உதவி தராவிட்டால் என்னைக் கடவுள் கூட மன்னிக்க மாட்டார்.” என்று கூறி மக்களோடு மக்களாக நின்று, இறுதி வரை மருத்துவ உதவிகள் செய்த அரசு மருத்துவரான வரதராஜா அவர்களின் சாட்சியக் காட்சி ஆவணமாக இத்திரைப்படம் மிக நேர்த்தியாக எடுக்கப் பட்டிருக்கிறது.

ஈழத்து மண்ணின் இறுதி நாள் வலியை உணர்ந்த ஒருவரின் திரை ஆவணப் படைப்பு என்றால் அதில் என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்ல அவசியம் இல்லை என்பதில் தெளிவு இருக்கும் என்பதற்கான நல்ல எடுத்துக் காட்டு இப்படம்.

அதே போல, கொஞ்சம் கூட மிகைப்படுத்தல்கள் இல்லாமல், அலட்டல்  நடிப்பு இல்லாமல் இயல்பான வகையில், தரமான ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, கதா பாத்திரங்கள், இசை எனக் கவனித்துக் கோர்க்கப்பட்டிருக்கிறது இத்திரைப்படம்.

ஒரு அரசு மருத்துவராக இருந்த போதும், இலங்கை இராணுவத்தால் அவர் நடத்தப்பட்ட விதம், ஒரு நொடியில் உயிர் பிழைத்த நிகழ்வு ஆகியவற்றைக் காணும் போது, “உயிர்க் கொலை தவிர்க்க, பிறருக்குத் துன்பமிழைக்காமல் அன்பு செய்” என்று சொன்ன புத்தரின் பௌத்த மண்ணிலா இப்படி ஒரு உலகமகா அநீதி, குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன ? எனும் கேள்வி துளைத்து எடுக்கிறது.

“நாளை பத்திரிகையாளர் சந்திப்பு. நாங்க சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லணும். இல்லை என்றால், உன் குடும்பமும் இருக்காது, நீயும் இருக்க மாட்டாய்” என இராணுவ அலுவலர் மிரட்டி, பத்திரிகையாளர் சந்திப்பில், “யுத்த வலையப் பகுதியினுள் ஒரு அப்பாவிகூட உயிரிழக்கலை” என்று மருத்துவர் வரதராஜாவை சொல்ல வைக்கிறார்.

மனசாட்சிக்கு விரோதமாக இவ்வாறு கூறி விட்டதும், துப்பாக்கி ஒலிகளும், மரண ஓலங்களும் வரதராஜா அமெரிக்கா சென்று குடியேறிய பின்பும், உறக்கத்தைக் கலைக்கும், கொடூரக் கனவுகளாக ஒல்வொரு இரவும் மாறி விட்டதால் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார் வரதராஜா. சிகிச்சையும் எடுத்துக் கொள்கிறார்.

கடந்த காலங்களில் இருந்து மீள முடியாத யுத்த இறுதிக் காலத்தின் வாழும் சாட்சியமாக இருந்து தானும், தமது மனைவி, குழந்தையையும் நடிக்க வைத்து இத்திரைப்படத்திலும் அதை ஆவணப் படுத்தியிருக்கிறார் டாக்டர் வரதராஜா.

இப்படி உதவிய தமக்கு இலங்கை இராணுவம் துன்பமளித்த, அதே வேளை குடிக்க நீர் கொடுத்த நிலையில், மறுபுறம் குடிக்க சிறிது தண்ணீர் கூடத் தராத சக ஈழத் தமிழர் ஒருவர் பற்றியும் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.

போரை முறியடிக்கிறோம் என உலக அரங்கில் இலங்கை அரசு, அறிவித்து விட்டு, தமிழர் பகுதிக்கு, குடிநீர், உணவு, மருந்து, மருத்துவ உதவிகள் ஆகிய அனைத்தையும் துண்டித்து விட்டு அப்பாவி மக்கள் மீது கொத்துக் குண்டுகளை வீசிக் கொன்ற நிகழ்வு கண்முன்னே காட்சிகளாக இத்திரைப்படத்தில் விரிகின்றன.

படத்தின் ஒரு வசனம், 90 நிமிடப் படத்தின் ஹைலைட். இப்போதும், காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

டாக்டர் வரதராஜா – “ஒரு நாள் எல்லா உண்மைகளையும் இந்த உலகத்துக்குச் சொல்லுவேன்”.அவரது மனைவி – “எல்லா உண்மைகளும், எல்லோருக்கும் தெரியும்” என்பது. ஆம், எல்லாருக்கும் தெரிந்தே இனப் படுகொலையும், போர்க் குற்றமும் ஈழ மண்ணில் அரங்கேறியிருக்கின்றன.

அமேசான் பிரைம் தளத்தில் இப்படம் காணக் கிடைக்கிறது. தற்போது அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட 5 நாடுகளில் மட்டும் தெரியும் அளவில் அமேசான் அனுமதி கொடுத்திருக்கிறது. இந்நாடுகளில், வசிப்பவர்கள் 3.99 அமெரிக்க டாலர் பணம் கட்டி, யூசர் நேம், பாஸ்வேட் கொடுத்தால் பார்க்க இயலும்.

உலக நாடுகள் அனைத்திலும் பார்க்க அமேசான் விரைவில் அனுமதிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. மருத்துவர். வரதராஜா மற்றும் படக் குழுவினருக்கு வாழ்த்துகளும், பாராட்டுதல்களும்.

– வளர் மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத், தலைமை செய்தி ஆலோசகர், TNTV Tamil Oodagam குழுமம்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 உறக்கத்தைக் கலைத்த 'The Lamp of Truth' - 'பொய்யா விளக்கு' திரைப்படம்