இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு முன் நின்ற ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை கையளிப்பதற்கு விரும்ப மாட்டார்கள் என்று முன்னாள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் கீழ் உள்ள வடக்கு மாகாண சபைக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நிழல் அமைச்சர்களாக நியமித்தமை தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
”இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்த ஜே.வி.பியினர் தற்போது தேசிய மக்கள் சக்தியாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்”. “அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்க வடக்கு கிழக்கு மாகாண சபையை அதிகாரம் உள்ள ஒரு சபையாக செயற்படுவதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது தெரிந்த விடயம்”.
“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தபின் மாகாண சபை முறைமை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருக்கின்ற விஜித ஹேரத் ஆகியோருக்கு தாம் கடிதம் அனுப்பிய போதிலும் அதற்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு மாகாண சபை வினைத்திறனாக செயற்பட வேண்டுமானால் 160 நியதி சட்டங்களை உருவாக்க வேண்டும். இலங்கையில் அவ்வாறு எந்த மாகாணமும் உருவாக்கவில்லை.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் 25க்கு குறைவான நியதிச் சட்டங்களையே உருவாக்க முடிந்தமை துரதிஷ்டவசமான சம்பவமாக இருந்தாலும் அதற்கு அந்தந்த மாகாணங்களில் இருந்த ஆளுநர்கள் காரணமாக இருந்தார்கள் என்றும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் ரணில் விக்ரமசிங்க காலத்தில் மாகாண சபை முறை தொடர்பில் ஆலோசனை வழங்கும் குழுவில் நான் அங்கம் வகித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுடன் கொழும்பில் சந்தித்த போது மாகாணங்களில் இருந்து மீள மத்திக்கு பெறப்பட்ட அதிகாரங்களை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போது தேசிய மக்கள் சக்தியினர் மாகாண அதிகாரங்கள் தொடர்பில் பேசுவதற்கு கூட விருப்பமில்லாதவர்களாக இருக்கின்ற நிலையில் மாகாண சபை தேர்தல் ஒன்றை நடத்துவார்களா? என்ற சந்தேகம் வலுவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.



