பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்- வாக்குறுதியை நிறைவேற்றுவோம் : அமைச்சர் சமந்த வித்தியாரத்ன

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக 1700 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதற்கு தலையிடுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். ஆனால் சம்பளத்தை அதிகரிப்பதாக சட்ட ரீதியாக எம்மால் கூற முடியாது. வீதிக்கிறங்கி, உற்பத்திகளை குறைத்து, அசௌகரியங்களுக்கு மத்தியில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய நிலைமைக்கு தொழிலாளர்களை உள்ளாக்குவதற்கு நாம் தயாராக இல்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் தேயிலை தொழில்துறை சார்ந்த தோட்டத் தொழிலாளர் தரப்பினரின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவர்கள் பலருடன் அண்மையில் நுவரெலியா நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர்,

எம்மை விமர்சிப்பவர்கள் 76 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்திருக்கின்றனர். ஆனால் நாம் ஒரு வருடத்தை மாத்திரமே கடந்திருக்கின்றோம். ஒரு வருடத்துக்குள் அனைத்தையும் செய்து விட முடியாது.

அதற்கமைய மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வினை வழங்குவோம். கடந்த ஆண்டு வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டதோடு, தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

24 000 ஆகக் காணப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தை 40 000 ரூபாவாகவும், 21 000 ஆகக் காணப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தை 27 000 ரூபாவாகவும் அதிகரித்தோம்.

சட்ட ரீதியாக அரசாங்கத்தால் அதனை செய்ய முடிந்தது. அதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக 1700 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதற்கு தலையிடுவோம் என ஜனாதிபதி உறுதியளித்தார். ஆனால் சட்ட ரீதியாக சம்பளத்தை அதிகரிப்பதாக எம்மால் கூற முடியாது. கம்பனிகளே அதனை செய்ய வேண்டும்.

எனவே தான் இந்த விடயத்தில் நாம் தலையிடுவோம் என உறுதியளித்தோம். வழங்கிய வாக்குறுதிக்கமைய பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். கம்பனிகளின் பிரதானிகளுடன் பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். ஆரம்பகட்டத்தில் அவர்களிடமிருந்து கிடைத்த பதிலளிப்புக்கள் குறைவாகவே இருந்தன.

ஆனால் தற்போது அவற்றில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது. இறுதியாக ஜனாதிபதிக்கும் கம்பனிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தைகளில் 1700 ரூபா அடிப்படை நாட் சம்பளம் வேண்டும் என்று கம்பனிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

அதனை வழங்குவதில் அவர்களுக்குள்ள பிரச்சினைகள், சிக்கல்களையும் கூறினர். அவை தொடர்பில் பிரத்தியேகமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கலாம்.

அதற்கு முன்னர் 1700 சம்பளத்தை வழங்குங்கள் என்று கம்பனிகளிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். 1700 ரூபா அடிப்படை சம்பளத்தை ஒருபோதும் பெற முடியாது என எதிர்க்கட்சிகளின் மலையகப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களது பேச்சைக் கேட்டு வீதிக்கு இறங்க வேண்டாம் என தொழிற்சங்கங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். வீதிக்கிறங்கி, உற்பத்திகளை குறைத்து, அசௌகரியங்களுக்கு மத்தியில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய நிலைமைக்கு தொழிலாளர்களை உள்ளாக்குவதற்கு நாம் தயாராக இல்லை.

1700 ரூபாவை விட ஒரு ரூபா கூட குறையாத அடிப்படை சம்பளத்தை நிச்சயம் பெற்றுக் கொடுப்போம். எனவே சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்போம் என பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதியளிக்கின்றோம். எனவே இன்னும் சிறு காலம் சற்று பொறுமையாக இருக்குமாறு தொழிலாளர்களிடம் கோருகின்றோம்.

நவம்பர் 7ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்திலும் நாம் இதனை வலியுறுத்துவோம். எவ்வித ஆர்ப்பாட்டங்களும் இன்றி அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கியதைப் போன்று, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்போம் என்றார்.